ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கியவர்!

நெட்டிசன்:

இவர் பெயர் திருமதி ஈஸ்வரி. ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த இவர், திருமணம் ஆகி அறச்சலூர் அருகே ஓடாநிலையில் வசித்து வருகிறார்.

இவருடைய தம்பி நடராஜன் என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். BBM, MBA மற்றும் M.Phil பட்டதாரியான நடராஜன் மேலும் P.hd பட்டம் பெற்று பெரிய வேலையில் சேர வேண்டும் என லட்சியத்தோடு இருந்தபோது உடல்நலம் சரியில்லாமல் போனது.

பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நடராஜனுக்கு உடல்நலம் சரி ஆகாததால் சுமார் 10 ஆண்டுகள் வீட்டிலேயே படுத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

அந்த சூழ்நிலையிலும் நாம் வீட்டிலிருந்தாவது படிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நடராஜனுக்கு உடல்நிலை மேலும் மோசமானது.

நாம் இனி வாழப்போவது இல்லையென உணர்ந்த நடராஜன், தனது தந்தை நாச்சிமுத்துவை அழைத்து, நான் நன்கு படித்து வேலைக்கு போக வேண்டும் என கனவு கண்டேன். ஆனால் இனி நான் வாழ்வதே சிரமம். அதனால் நம்முடைய சொத்தில் எனக்கு சேரும் பங்கை ஏழை குழந்தைகள் படிக்கும் நம்ம ஊர் அரசு பள்ளிக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இதை செய்ய முடியுமா? என கேட்டுள்ளார்.

மகன் சொன்ன வார்த்தையை கேட்டு மகனின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என ஒருபுறம் கலங்கினாலும், மறுபுறம் இந்த நிலையிலும் ஏழை குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிக்கூடத்துக்கு சொத்தை எழுதி தரச் சொல்கிறானே என மகிழ்ந்திருக்கிறார்.

மகன் சொன்னது குறித்து தனது மகள் ஈஸ்வரியிடம் சொன்னால் ஏதாவது நினைப்பாரோ என நாச்சிமுத்து பயந்து பயந்து ஈஸ்வரியிடம் சொல்லியிருக்கிறார்.

ஆனால் மகள் ஈஸ்வரியோ, இது எவ்வளவு பெரிய சிந்தனை. இதற்கு நான் தடையாக இருப்பேனா? உடனே இதை செய்யுங்கள் என கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 தேதியன்று நடராஜனின் உயிரை காலன் பறித்துக் கொண்டான்.
இதனால் மனமுடைந்த நடராஜனின் தாயும் கடந்த வருடம் ஜுலை மாதம் 9-ம் தேதியன்று இறந்து விட்டார்.

அதன்பிறகு நடராஜனின் கடைசி வேண்டுகோளுக்கு இணங்க ஈஸ்வரியின் முழு சம்மதத்துடன் சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் உள்ள 4 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை அரசு பள்ளிக்கூடத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை நாச்சிமுத்துவும், ஈஸ்வரியும் செய்தனர். இந்த விஷயத்தை ஈஸ்வரி தனது கணவன், மகள்&மருமகனிடம் கூட தெரிவிக்கவில்லை.

அதன்பிறகு கடந்த மே மாதம், தான் இறந்த பிறகு 4 ஏக்கர் 60 சென்ட் நிலம் அம்மாபாளையம் அரசு பள்ளிக்கே சேரும் என்ற உயிலை நாச்சிமுத்து எழுதி தனது மகள் ஈஸ்வரியிடம் கொடுத்து விட்டார்.
உயில் எழுதிய விஷயத்தை தனது குடும்பத்தினரிடம் சொன்னால் கூட ஏதாவது தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்பதற்காக யாரிடமும் இந்த விஷயத்தை ஈஸ்வரி ரகசியமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 12-ம் தேதி ஈஸ்வரியின் தந்தை நாச்சிமுத்து இறந்து விட்டார். அதன்பிறகே தனது தந்தை அரசுப் பள்ளிக்கு நிலம் தானமாக வழங்க உயில் எழுதிய விஷயத்தையே தன்னுடைய குடும்பத்தினரிடம் ஈஸ்வரி தெரிவித்திருக்கிறார்.
அதைக்கேட்ட ஈஸ்வரியின் கணவர், மகள்-மருமகன் அனைவருமே 1 கோடி ரூபாய் சொத்து போய்விட்டதே என கவலைப்படாமல் ஈஸ்வரியின் செயலைக் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டிருக்கின்றனர்.

அரசு பள்ளிக்கு என் பங்கு நிலத்தை கொடுங்கள் என நடராஜனின் விருப்பத்தை தனது மகள் ஈஸ்வரியிடம் நாச்சிமுத்து சொல்லும் போது அதை ஈஸ்வரி ஏற்க மறுத்திருந்தாலோ அல்லது நாச்சிமுத்து எழுதி கொடுத்திருந்த உயிலை யாருக்கும் தெரியாமல் ஈஸ்வரி கிழித்து எறிந்திருந்தாலோ இந்நேரம் அந்த 1 கோடி ரூபாய் சொத்து ஈஸ்வரிக்கே கிடைத்திருக்கும். ஆனால் அதை ஈஸ்வரி அவர்கள் செய்யவில்லை.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நான், தினத்தந்திக்காக பேட்டி எடுக்க நேற்று (18-11-2017) சென்னிமலை அருகே கருங்கவுண்டன்வலசு என்ற ஊரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த ஈஸ்வரி அவர்களை தேடிச் சென்றேன்.
பேட்டி என்றதும் இதற்கு ஏன் விளம்பரம் என மறுத்து விட்டாா்.

அப்போது அங்கு வந்திருந்த நண்பர் பசுவபட்டி கி.வே.பொன்னையன் அவர்கள் ஈஸ்வரியை சமாதானம் செய்த பிறகுதான் பேட்டி கொடுக்க முன்வந்தார்.

என்னிடம் ஈஸ்வரி அவர்கள் கூறுகையில், எனது தந்தை படிக்கவில்லை. அதனால் என்னையும், என் தம்பி நடராஜனையும் படிக்க வைக்க ஆசைப்பட்டார். நான் கல்லூரியில் B.Com முதல் ஆண்டு மட்டும் படித்தேன். ஆனால் என் தம்பி நடராஜன் கல்லூரிக்கு சென்று BBM படித்து பிறகு வீட்டில் இருந்தே MBA மற்றும் M.Phil படித்தான்.

என் தம்பிக்கு நன்கு படிக்க வேண்டும் என்ற ஆசையை தவிர எந்த ஆசையும் இல்லை. ஆனால் 10 வருடம் நோய்வாய் பட்டு படுத்த படுக்கையாகி விட்டான்.
நம்ம வாழ்க்கை தான் இப்படி ஆகிவிட்டது. மற்றவர்களாவது அதுவும் ஏழை குழந்தைகளாவது நன்கு படிக்கட்டுமே என அவனுக்கு சேரும் நிலத்தை அம்மாபாளையம் அரசு பள்ளிக்கு எழுதி தர வேண்டும் என ஆசைப்பட்டான்.

அவனது ஆசையை அவன் இருக்கும் போதே செய்துவிட வேண்டும் என நானும், என் தந்தையும் முயற்சி செய்தோம். அப்போது பட்டா மாறுதல், விடுதலை பத்திரம் என எதுவும் இல்லாததால் எங்களால் முடியவில்லை. அதற்குள் எனது தம்பி இறந்து விட்டான்.
அதன்பிறகு பட்டா மாறுதல், விடுதலை பத்திரம் என அனைத்தையும் பெற்றபின்னர் அரசுப் பள்ளிக்கு நாலரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்குவது குறித்து என் தந்தை உயில் எழுதி என்னிடம் கொடுத்தார்.

எனது தம்பி மற்றும் எனது தந்தை ஆகியோரின் விருப்பப்படி அந்த நிலத்திற்கான உயில் ஆவணத்தை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டேன் என்றார் கண்ணீருடன்!

பல ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கூட அடுத்தவன் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் இந்த காலத்தில் திருமதி ஈஸ்வரி அவர்கள் ஒரு அபூா்வம்தான்.

 

(உலக தமிழர் பக்கம் முகநூல்)

 

Leave a Reply

Your email address will not be published.