ணிப்பூர்:

ணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் கே.ஜே.அப்போன்சின் வருகையால், விமானம் புறப்பட தாமதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி, அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மணிப்பூர் மாநிலத்திற்கு வருகை தந்தார்.

அவர் பயணம் செய்த விமானம் இம்பால் விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அமைச்சர் விமானத்தில் இருந்து வெளியேறி விமான நிலையத்தின் வாயிலுக்கு வந்து சேரும் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற விமானங்கள் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், அங்கிருந்து மற்ற நகரங்களுக்கு புறப்பட வேண்டிய பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அமைச்சர் வெளியே வந்தநிலையில் பெண் பயணி ஒருவர் அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தனது சகோதரன் இறந்துவிட்ட தகவல் கிடைத்து தான் ஊருக்குச் செல்ல வந்திருப்பதாகவும், அமைச்சரின் வருகையால் பிற விமானங்கள் புறப்படுவது நீண்ட நேரமாக தாமதப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் ஆத்திரமும் அழுகையுமாகத் தெரிவித்தார்.

இதைக்கேட்ட அமைச்சர், விமானங்கள் உடனே புறப்பட தான் சொல்வதாக சமாதானம் செய்தார். அப்போதும் சமாதானம் அடையாத அந்தப்பெண்மணி, அமைச்சரின் வாக்குறுதியை எழுதித்தருமாறு கேட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விமான நிலைய அதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்ய முற்பட்டனர். ஆனால் அவர் அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார். பிறகு அந்தப் பயணியை விமான நிலைய அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.