பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்! தமிழிசை

சென்னை,

துவுக்கு எதிரான போராட்டத்தில், பெண்ணை  கடுமையாக தாக்கிய போலீஸ் அதிகாரியை உடனே  பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,

திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸ் அதிகாரி மிருகத்தனமாக தாக்கியுள்ளார். பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது  வன்மையாக கண்டிக்கத்தக்கது.  அந்த போலீஸ் அதிகாரியை தமிழக அரசு உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட் டங்கள் நடத்தி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டு, அருகிலுள்ள குறுக்கு சந்துகளுக்குள்  புதிய மதுக்கடைகள் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுபோன்று, புதிய மதுக்கடைகளை   தமிழக அரசு திறக்க கூடாது. அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்றும்,  மதுக்கடைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் விரைவில் பாரதிய ஜனதா போராட்டம் நடத்தும் என்றார்.

விவசாயிகளுக்கு உத்தர பிரதேச பா.ஜனதா அரசு பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது. அதே போல் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கும் உண்டு.

மோடி அரசு விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில்  50 லட்சம் விவசாயிகள் வரை இந்த திட்டத்தில் உறுப்பினராக சேரலாம். ஆனால்,  13 ஆயிரம் பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு திட்டம் குறித்து  விவசாயிகளுக்கு தமிழக அரசு சரியான விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும், டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும். அதன் காரணமாக  அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.