20 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு

கொல்லம்: கடந்த 20 ஆண்டுகளாக ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட லதா என்ற பெண், மகளிர் கமிஷனால் மீட்கப்பட்டுள்ளார்.

46 வயதான, கணவனால் கைவிடப்பட்ட அந்தப் பெண், தனது சகோதரி மகேஸ்வரியின் இல்லத்தின் அருகிலேயே சிமெண்ட் கற்களால் கட்டப்பட்ட ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு, அந்த அறையின் ஜன்னல் வழியாக ஒரு நாளைக்கு ஒருமுறை உணவு கொடுக்கப்பட்டு வந்தது.

அந்த அறை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அடிப்படையான தேவைகளுக்குக்கூட அவர் வெளியில் விடப்படவில்லை.

லதாவின் 22மகன், ராஜேஸ்வரியின் வீட்டில் வசிக்கிறான். லதாவிற்கு 26 வயதாக இருக்கையில், அவருடைய கணவர், லதாவை விட்டுப் பிரிந்துவிட்டார்.

லதாவை வெளியில் விட்டால் எங்கேனும் ஓடிவிடுவார் என்பதாலும், அவருக்கான சிகிச்சைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாலும், இப்படி அறைக்குள் அடைத்து வைத்திருப்பதாக அவரது உறவினர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது மகளிர் ஆணையம்.

மீட்கப்பட்ட லதா, கொல்லம் பத்தனாபுரத்திலுள்ள காந்திபவன் பராமரிப்பு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவரின் மருத்துவ செலவை மாநில அரசு கவனித்துக் கொள்ளும் என்று சொல்லப்பட்டுள்ளது.