இந்தியாவின் முதல் கொரோனா சோதனை கருவிப் பணியை முடித்த பிறகு குழந்தை பெற்ற பெண் விஞ்ஞானி

புனே

ந்தியாவின் முதல் கொரோனா சோதனைக் கருவிப் பணியில் ஈடுபட்ட பெண் விஞ்ஞானிக்கு பெண்  குழந்தை பிறந்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்கும் அளவுக்குச் சோதனை வசதிகள் குறைவாக உள்ளன.  எனவே இதைச் சமாளிக்க இந்திய மருத்துவக் குழு பல தனியார் சோதனை நிலையங்களுக்கு கொரோனா சோதனை நடத்த அனுமதி அளித்து வருகிறது.  அரசு சோதனை நிலையங்களில் இலவசமாக நடக்கும் இந்த சோதனைக்குத் தனியார் ரூ.4500 கட்டணம் வசூலிக்கின்றனர்.

புனேவில் உள்ள மைலாப் டிஸ்கவரி என்னும் நிறுவனம் இந்தியாவின் முதல் சோதனைக் கருவியைக் கண்டுபிடித்து இந்திய மருத்துவக் குழுவுக்கு அனுப்பி வைத்தது.  இந்திய மருத்துவக் குழு அதை ஆய்வு செய்து அனுமதி அளித்தது.  அதையொட்டி இந்த வாரம் மைலாப் நிறுவனம் புனே, மும்பை, டில்லி, கோவா மற்றும் பெங்களூருவுக்குத் தனது முதல் 150 கருவிகளை அனுப்பி உள்ளது.

ஒரு கருவி மூலம் 100 மாதிரிகளைச் சோதனை செய்யலாம் எனவும் இந்த கருவியின் விலை  ரூ.1200 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இந்த கருவி உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் மினால் தகேவ் போஸ்லே என்னும் பெண்ணும் ஒருவர் ஆவார்.   இவர் இந்த கருவியை உருவாக்க 3 அல்லது 4 மாதங்கள் ஆகும் எனச் சொல்லப்பட்ட நேரத்தில் 6 வாரத்தில் உருவாக்கியுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான மினால் இரவும் பகலும் உழைத்து இந்த கருவிகளின் முதல் விநியோகத்தைச் செய்துள்ளார்.  இந்த விநியோகம் முடிந்த அடுத்த நாள் இவர் தனது மகளை பெற்றெடுத்துள்ளார்.   சொல்லப்போனால் அன்று மாலை மகப்பேற்றுக்காக மருத்துவமனையில் சேர்வதற்கு முன்னால் இந்த கருவிகளை அனுப்பி உள்ளதைப் பார்த்து விட்டுச் சென்றுள்ளார்.