சென்னை:  காவல் நிலையம் முன் தீக்குளித்த பெண் உயிரிழப்பு!

காவலர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி சென்னை திருவேற்காடு காவல்நிலையத்தின் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவேற்காடு பகுதியில் உள்ள செந்தமிழ் நகரில் வசித்துவந்தவர் ரேணுகா.  இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் உள்ள அமிர்தவள்ளி என்பவரின் குடும்பத்தினருக்கும் பிரச்னை இருந்துவந்தது.

இந்த நிலையில் திருவேற்காடு காவல்நிலையத்தில் ரேணுகா மீது அமிர்தவள்ளி புகார் அளித்தார். இதுகுறித்த விசாரணைக்காக நேற்று காவல்நிலையம் வந்த ரேணுகா, தன்மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

இதைக் கண்ட காவலர்கள் அவர் போராடி  தீயை அணைத்தனர். பலத்த தீக்காயம் அடைந்த ரேணுகாவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிந்தார்.

காவல்துறையினர் ஒருதலைபட்சமாக அமிர்தவள்ளி குடும்பத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, ரேணுகாவை மிரட்டியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் என ரேணுகாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.