நடனத்தை நிறுத்தியதால் சுடப்பட்ட பெண்: உ.பி யில் தொடரும் வன்முறை!

--

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய ஒரு பெண் மேடையில் திடீரென்று துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு திருமண நிகழ்வுகளில் பெண்களை நடனமாட வைப்பது ஒரு வழக்கமாகியுள்ளது. அது போன்ற நிகழ்வில் தான் இப்படியொரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் அருகே சித்ரகூட் பகுதியில் கிராமத் தலைவரான சுதிர் சிங் படேலுடைய மகளின் திருமணம் டிச.,1 ல் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை கச்சேரி நிகழ்ச்சி, பாட்டு, நடனம் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. மேடையில் நடன குழுவைச் சேர்ந்த ஹினா (22) என்ற பெண் நடனமாடிக் கொண்டிருந்தார். மண்டபத்தில் இருந்த மற்ற நபர்கள் உரக்க பாட்டு பாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கூட்டத்தில் குடிபோதையில் இருந்த ஒருவர், “கோலி சல் ஜெயேகி” ( ஆட்கள் சுடப்படுவார்கள் ) என்று கூறினார். இதனை கேட்டு அதிர்ந்தஅந்த பெண் நடனத்தை நிறுத்தினார். அந்த பெண் நடனத்தை நிறுத்தியதால் ஆவேசமடைந்த ஒருவர், “சுதிர் பயா, ஆப் கோலி சலா ஹாய் டூ” ( சுதிர்பயா நீ சுடு ) என்று மற்றொரு நபரிடம் கூறினார். அடுத்த நிமிடத்தில் நடனமாடிய அந்தப்பெண் திடீரென முகத்தில் சுடப்பட்டு கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் மணமகனின் தாய்மாமா இரண்டு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மணமகனின் மாமா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக அங்கு எடுக்கப்பட்ட வீடியோ பதிவு மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி அங்கித் மிட்டல் கூறுகையில், துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட பெண் காயங்களுடன் கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய சுதிர் சிங் மற்றும் பூல் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

2016 ல் பஞ்சாப் மாநிலத்தில் பதிந்தாவில் திருமண நிகழ்ச்சியின் போது நடனமாடிய குல்விந்தர் கவுர்(25) என்ற கர்ப்பிணி ஒருவரும் வயிற்றில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே அந்த பெண் இறந்தாள். கடந்த ஆண்டில் திருமண நிகழ்ச்சியில் பாட்டு கோரிக்கையில் எழுந்த சர்ச்சை தொடர்பாக இளைஞர் ஒருவர் சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

You may have missed