கட்டியை கர்ப்பம் என கூறிய மருத்துவமனை மீது பெண் வழக்கு

--

சென்னை

சென்னை திருவல்லிகேணி அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு கட்டியை கர்ப்பம் என தவறாக கூறியதால் அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னையை சேர்ந்த ஆசினா பேகம் என்னும் பெண் வெகுநாட்களாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தார்.   இதனால் அவருடைய புகுந்த வீட்டினர் இவர் மீது மிகவும் கோபமாக இருந்துள்ளனர்.  இந்நிலையில் கடந்த 2016ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி  உடல்நலம் சரியில்லாததால் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மருத்துவமனைக்கு ஆசினா பேகம் சென்றுள்ளார்.

அவர் கருவுற்றிருப்பதாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு ஆசினாவும் அவருடைய உறவினர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   அவருக்கு 2016 ஆம் வருடம் நவம்பர் 18 அன்று குழந்தை பிறக்கும் என அந்த மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   அந்த தேதியில் அவருக்கு பிரசவ வலி வரவில்லை.   அதனால் பதட்டம் அடைந்த ஆசினாவின் குடும்பத்தினர் அவரை அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது.  ஸ்கேன் ரிப்போர்ட்டை கண்ட மருத்துவர்கள்  குழந்தை முழு வளர்ச்சியுடன் உள்ளதாகவும் விரைவில் பிறந்து விடும் எனவும் தெரிவித்துள்ளனர்.   ஆசினாவுக்கு அதே மாதம் 21 ஆம் தேதி அன்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.  அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கர்ப்பம் இல்லை எனவும் அவருடைய கருப்பையில் கட்டி உள்ளதை தவறாக கர்ப்பம் என முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு ஆசினா மற்றொரு மருத்துவரிடம் காட்டி உள்ளார். அவரும் ஆசினா கர்ப்பம் இல்லை எனவும் அவருக்கு கட்டி உள்ளதாகவும்தெரிவித்துள்ளனர்.    இதை ஒட்டி ஆசினா பேகம் மனித உரிமை ஆணையத்திடம்  மருத்துவமனை குறித்தும் மருத்துவர்கள் குறித்தும் புகார் அளித்துள்ளார்.

மேலும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு ஒன்றி தொடர்ந்துள்ளார்.   இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ராஜா மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சுகாதார மற்றும் குடும்பநலத்துறைக்கும் இரண்டு வாரத்துக்குள் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.