சென்னை ஐடி நிறுவன மாடியில் இருந்து விழுந்து பெண் ஊழியர் மரணம்! கொலையா தற்கொலையா?

சென்னை:

சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்த இளம்பெண் ஒருவர், முதல்நாளே அந்நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுந்து இறந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இது கொலையா? தற்கொலையா? என்று கேள்வி எழுந்துள்ளது.

திருச்சியை சேர்ந்த ஜெனிட்டா ஜூலியஸ் என்ற 23வயது பொறியியல் பட்டதாரி இளம்பெண்,  சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

நேற்றுதான் அவர் முதன்முதலாக பணிக்கு சேர்ந்த நிலையில், அலுவலகத்தின் 8வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில்,  அலுவலகத்தின் 9வது மாடியில் உள்ள உணவகத்தில் இருந்து, தடை செய்யப் பட்ட மாடிப்படி வழியாக கீழ் தளத்துக்கு இறங்க முயன்றபோது, ஜெனிட்டா தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால், புதியதாக வேலைக்கு சேர்ந்த ஒருவர், தடை செய்யப்பட்ட பகுதி எதற்காக சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை யாராவது தள்ளிவிட்டார்களா? உணவு இடை வேளையின் போது, ஏராளமானோர் அங்கு இருந்த நிலையில், ஜெனிட்டா மட்டும் எப்படி தடை செய்யப்பட்டப் பகுதிச் சென்றார் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

அதேவேளையில்  மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.