‘ஆண்ட்டி’ என அழைத்ததால் இளம்பெண்ணுக்கு ‘பளார்’ விட்ட 40 வயது பெண்: சந்தையில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை..

 

லக்னோ :

த்தரபிரதேச மாநிலம் எட்டவா நகரில் உள்ள பாபுகஞ்ச் மார்க்கெட் பெண்களுக்கான உடைகள், அணிகலன்களை விற்கும் பிரத்யேக சந்தையாகும்.

இந்த சந்தையில் எப்போதும் பெண்கள் கூட்டம் நிரம்பி வழியும். கூட்டத்தை ஒழுங்க படுத்த பெண் போலீசார் கூடுதலாக இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கடந்த திங்கள்கிழமையும் வழக்கம் போல் திரளான கூட்டம். நெரிசலில் மாட்டிக்கொண்ட 19 வயது இளம்பெண், தன் முன்னால் சென்ற 40 வயது பெண்ணிடம் “எக்ஸ்கியூஸ் ஆண்ட்டி, கொஞ்சம் வழி விடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதனால் 40 வயது பெண்ணின் முகம் கறுத்துப்போனது. “என்னை பார்த்தால் ஆண்ட்டி மாதிரி தெரிகிறதா?” என கேட்டு, 19 வயது பெண்ணின் கன்னத்தில் பளார் என அறை விட்டுள்ளார்.

பதிலுக்கு இளம்பெண்ணும் “கை வரிசையை” காட்ட இருவரும் அந்த சந்தையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் படாத பாடுபட்டு பெண்கள் சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.

இந்த கண்கொள்ளா காட்சியை, யாரோ வீடியோவில் படம் பிடித்து வெளியிட அந்த வீடியோ உ.பி.யில் இப்போது வைரலாக பரவி வருகிறது.

– பா. பாரதி