சுட்டுக்கொல்லப்பட்ட பெண் அதிகாரி (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)

சிம்லா:

ச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து மலைப்பகுதியை  ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஓட்டலை இடிக்க சொல்லி வலியுறுத்தச்  சென்ற பெண் அதிகாரி, ஓட்டல் அதிபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா கட்சி  வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், அரசு அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சலப்பிரதேச மாநிலம் சோலான் மாவட்டத்தில் உள்ள கசவுலி என்ற மலைப்பாங்கான பகுதியில் சிலர் அரசு விதிமுறைகளை மீறி ஓட்டல்கள் கட்டியுள்ளனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பு பகுதிகள் உடனே அகற்றப்பட வேண்டும்  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து மாநில நகர திட்டமிடல் துறை பெண் அதிகாரி ஷாலி பால சர்மா என்பவர் சக அதிகாரி களுடன், அந்த பகுதிக்கு சென்று, விதிமுறைகளுக்கு புறம்பாக ஓட்டல் கட்டியுள்ளவர்களிடம் உச்சநீதி மன்ற உத்தரவை காட்டி, ஓட்டல்களை இடிக்க வலியுறுத்தி உள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட பெண் அதிகாரி

அப்போது, ஓட்டல் உரிமையாளர்களுக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த சிலமணி நேரத்திற்குள்  அங்குள்ள ஓட்டல் உரிமையாளர் விஜய் சிங் என்பவர் பெண் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். விஜய்சிங்கின் துப்பாக்கி சூட்டில்மேலும் ஒரு அதிகாரி காயமடைந்துள்ளார்.

அரசு அதிகாரிகள் மீதான இந்த துப்பாக்கி சூடு மாநி லத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை சுமோட்டோ வழக்காக எடுத்து விசாரணை செய்த உச்சநீதி மன்றம், ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை? என அம்மாநில அரசை கேள்விகளால் துளைத்தெடுத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி பதிலளிக்கவும் மாநில பாஜ அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாநிலத்தில் பாரதியஜனதா பதவி ஏற்று 3 மாதங்களுக்குள் அரசு அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.