பணியாளரின் விசாவை ரத்து செய்ய போதை மருந்தை ஒளித்து வைத்த எஜமானி

ராஸ் அல் கைமா , அமீரகம்

அமீரகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி தன்னுடைய பணியாளர் விசாவை ரத்து செய்ய அவர் காரில் போதை மருந்தை மறைத்து வைத்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக சட்டத்தின்படி போதை மருந்து வைத்திருப்பது மிகவும் கடுமையான குற்றமாகும். குறிப்பாக வெளிநாட்டினர் போதை மருந்தை வைத்திருந்தால் அவர்களுடைய விசா ரத்து செய்யப்பட்டு தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப் படுவார்கள். அத்துடன் அவ்வாறு பிடிபட்டவர் வாழ்நாள் முழுவதும் அமீரகத்துக்கு மீண்டும் வர முடியாது.

அமீரகத்திலுள்ள ராஸ் அல் கைமா நகரில் ஒரு பெண்மணி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரிடம் வேலை பார்த்த ஆசியாவின் ஒரு நாட்டை சேர்ந்தவர் மீது அந்த பெண்ணுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதை ஒட்டி அந்த பணியாளரை பழி வாங்கி விசாவை ரத்து செய்ய வைக்க பெண்மணி திட்டமிட்டார். அந்த பெண் தனக்கு தெரிந்த ஒரு போதை மருந்துக்கு அடிமையானவர் உதவியை நாடி உள்ளார்.

போதை மருந்துக்கு அடிமையானவர் பெண்மணியின் ஆலோசனைப்படி அந்த ஊழியரின் காரில் போதை மருந்தை வைத்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஊழியர் குற்றமற்றவர் என தெரிய வந்தது. அதன் பிறகு அந்த பெண்மணி, அவர் கணவர், உறவினர் மற்றும் போதை மருந்தை வைத்தவர் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

போதை மருந்தை வைத்த நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மருந்தை வைத்த நேரத்தில் தாம் முழு போதையில் இருந்ததால் தாம் இவ்வாறு செய்து விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி தம்மை அவ்வாறு செய்ய யாரும் வற்புறுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  அந்த பெண்மணியின் கணவரும் தமது மனைவி குற்றமற்றவர் என தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பெண்மணி மீது ஏற்கனவே கிரிமினல் புகார் உள்ளதாகவும் சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் அந்த பெண்மணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.