சென்னை

சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் ஜீன்ஸ் உடை அணிந்து வந்ததால் அவருக்கு ஓட்டுநர் உரிம தேர்வில் பங்கு பெற அனுமதி அளிக்கவில்லை.

ஒட்டுனர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலர் தேர்வு வைப்பது வழக்கமாகும்.  இந்த தேர்வில் போக்குவரத்து சின்னங்கள் குறித்த புரிதல் மற்றும்  ஓட்டும் திறன் ஆகியவை சோதிக்கப்பட்டு அதில் தேர்ச்சி அடைவோருக்கு உரிமம் வழங்கப்படும்.  இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தேர்வில் கலந்துக் கொள்ள வேண்டும்.

சென்னை நகரைச் சேர்ந்த பவித்ரா என்னும் ஒரு பெண் சென்னை கே கே நகரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திடம் ஓட்டுநர் உரிமம் கோரி மனு செய்துள்ளார்.  அவர் தேர்வுக்கு வந்த போது ஜீன்ஸ் மற்றும் கையில்லாத மேலாடை அணிந்து வந்துள்ளார்.  மோட்டார் வாகன ஆய்வாளர் அவரை தேர்வில் பங்கு பெற அனுமதிக்கவில்லை..

மாறாக அவர் உடை சரியாக இல்லை எனக் கூறி அவருக்கு தடை விதித்துள்ளார்.  பவித்ரா அவருடைய வீட்டுக்குச் சென்று ஒரு சல்வார் கமீஸ் அணிந்து வந்த பிறகு தேர்வில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இது பெண்கள் மத்தியில் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.

உடையைக் காரணம் காட்டி தேர்வில் கலந்துக் கொள்ளத் தடை செய்வது முதல் முறை அல்ல என கூறப்படுகிறது.   இதே ஆய்வாளர் சுமார் 10 நட்கள் முன்பு சுமதி என்னும் கல்லூரி மாணவியைத் தேர்வில் கலந்துக் கொள்ளத் தடை விதித்துள்ளார்.  அப்போது சுமதி ஒரு குட்டை பாவாடையும் சட்டையும் அணிந்துள்ளார்.

அவரையும் இந்த அதிகாரி வீட்டுக்கு சென்று டீசண்டாக உடை அணிந்து வருமாறு கூறி உள்ளார்.  சுமதி தேர்வில் கலந்துக்கொள்ள உடை பற்றிய விதிகள் இல்லை என வாதிட்டுள்ளார்.  ஆயினும் அந்த ஆய்வாளருடன் பனி புரியும் மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டு சுமதியின் உடை ஆட்சேபகரமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  சுமதி வீட்டுக்குச் சென்று சல்வார் உடையில் வந்த பிறகு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மோட்டார் வாகன விபத்துக்களைக் கவனித்து வரும் வழக்கறிஞர் சுரேஷ், “ஓட்டுநர் உரிம தேர்வில் உடைகள் பற்றி எதுவும் சொல்லவில்லை.  விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும்,  புத்தி சுவாதீனம் உள்ளவராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே விதி ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.