திருவனந்தபுரம்:

குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கேரளஅரசின் பாதுகாப்புடன் சென்ற பெண்ணான கனகதுர்கா, குடும்பத்தினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து, அய்யப்ப பக்தர்களின் எதிர்ப்பை மீறி, கேரள மாநில அரசின் பாதுகாப்புடன், கேரள மாநிலத்தை சேர்ந்த  கனகதுர்கா, பிந்து என்ற 50 வயதுக்கு குறைவான 2 பெண்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது அய்யப்ப பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து,  அரசின் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்ட கனகதுர்கா, சமீபத்தில், கேரள மாநிலம் அங்காடிபுரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், அவரை வீட்டுக்குள் ஏற்க மறுத்த அவரது கணவர் குடும்பத்தினர், அவரை விரட்டியடித்தனர்.  கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதில் காயம் அடைந்தவர் கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

சபரிமலை கோவிலுக்கு சென்றதற்காக கனகதுர்காக  வெளிப்படையாக மன்னிப்பு கேட்கும் வரை கனகதுர்காவை வீட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர். இதன் காரணமாக, கேரள  போலீசார் கனகதுர்காவை பெரிந்தலமன்னாவில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைத்துள்ளனர்.