புற்றுநோய் பாதிப்பால் பெண்ணின் கர்ப்பப்பை நீக்கப்பட்ட நிலையில் நவீன தொழில்நுட்பம் மூலம் குழந்தை: டாக்டர் கமலா செல்வராஜ் மருத்துவமனை சாதனை

சென்னை:

புற்றுநோய் பாதிப்பு காரணமாக கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணுக்கு புதிய  கருமுட்டை உற்பத்தி செய்து, அதை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார் பிரபல மகப்பேறு மருத்துவரான டாக்டர் கமலா செல்வராஜ் மகள் பிரியா செல்வராஜ்.

புதிய தொழில்நுட்பத்தின்படி கருமுட்டை உறிஞ்சி எடுத்து, சோதனை குழாய் மூலம் கருவை உருவாக்கி அதை வாடகை தாய்க்கு செலுத்தி குழந்தை பெற்றுள்ளது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

குழந்தையுடன் டாக்டர்கள் பிரியா செல்வராஜ் மற்றும் கமலா செல்வராஜ்

புற்றுநோய் பாதிப்பு காரணமாக, பெண்ணின் கர்ப்பப்பை நீக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணிடம் இருந்து  கருமுட்டையை உற்பத்தி செய்து, அதை  வாடகை தாயின் கருப்பையில் செலுத்தி குழந்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து பிரபல மகப்பேறு மருத்துவரான கமலா செல்வராஜின் மகள்  பிரியா செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த  27 வயதுடைய கேரள பெண்ணுக்கு கர்ப்பப்பை மற்றும் ஒரு இனப்பெருக்க மண்டலத்தை (கருவகம்) மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டனர். ஆனால் குழந்தை பேறு வேண்டி அந்த பெண்ணின் மற்றொரு இனப்பெருக்க மண்டலத்தை அறுவை சிகிச்சை செய்து, வலதுபுற வயிற்று பகுதிக்கும் தோல் பகுதிக்கும் இடையே மருத்துவர்கள் பொருத்தியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து அந்த பெண், தங்களது மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருந்தார். அவரை பரிசோதித்த நாங்கள், அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்தோம். அவருடைய இனப்பெருக்க மண்டலத்தை ஊக்கு விக்கும் ஊசி போட்டு கருமுட்டை வளர செய்யப்பட்டது. இந்த முயற்சி வெற்றி கரமாக நடைபெற்றதை தொடர்ந்து, அவரிடம் இருந்து அக்கருமுட்டையை உறிஞ்சி எடுத்து, அவரது கணவரின் விந்தணுவுடன் சோதனை குழாய் முறையில் இணையச் செய்தோம்.

பின்னர் அதை, வாடகை தாய் ஒருவரின் கர்ப்பப்பையில் செலுத்தி, அவரை கண்காணித்தோம். அவரது வயிற்றில் குழந்தை நன்றாக வளர்ந்து வந்தது. இதையடுத்து, கடந்த 16-ந்தேதி 2.62 கிலோ எடையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை நன்றாக உள்ளது என்று கூறினார்.

இந்த குழந்தைய பெறுவதற்காக, கருமுட்டையை சம்பந்தப்பட்ட பெண்ணின் வலதுபுற வயிற்றுபகுதியின் தோல் வழியே ஒலியதிர்வு கருவி (ஸ்கேன்) உதவி யுடன் உறிஞ்சி எடுத்து இருப்பது பெரும் சாதனை என்றும்,  இந்தியாவிலேயே இதுதான்  முதன் முறை என்றும் பெருமிதமாக கூறினார் பிரியா செல்வராஜ்.

இந்த நீவன தொழில்நுட்பம் புற்றுநோய் ஆரம்ப நிலை மற்றும் பாதித்தவர்களுக்கு ஒரு வரபிரசாதமாகவே இருக்கும் என்றும் கூறினார்.