வீட்டுச் சிறையில் இளம்பெண் : இளைஞரை செருப்பால் அடித்த பெண்கள்

போபால்

வீட்டுச் சிறையில் ஒரு இளம் பெண்ணை வைத்திருந்ததற்காக காவல்துறையினர் முன்னிலையில் பெண்கள் ஒரு இளைஞரை  செருப்பால் அடித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள மிஸ்ரோட் பகுதியில் ஒரு இளம் பெண் வசித்து வருகிறார்.   அதே பகுதியில் உள்ள ரோகித் சிங் என்னும் 30 வயது இளைஞர் இவர் மீது காதல் கொண்டுள்ளார்.  தினமும் அவரை பின் தொடர்ந்து அவருடன் பேச முயற்சி செய்துள்ளார்.   அந்தப் பெண் இவரிடம் பேசாமல் உதாசீனம் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் ரோகித் சிங் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் சென்று அவரிடம் தன்னை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தி உள்ளார்.   அந்தப் பெண் அதற்கு மறுத்துளார்.    மேலும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அந்தப் பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டி வீட்டுக்குள்ளேயே சிறை வைத்துள்ளார்.

அந்தப் பெண்ணின் வீடு திறக்கப்படாமல்  இருந்ததால் அக்கம் பக்கத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.   காவல்துறையினர் ஜன்னல் வழியாக பார்த்து விவரம் அறிந்தனர்.   யாராவது உள்ளே வந்தால்  அந்தப் பெண்ணை சுட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.   அதனால் காவல்துறையினர் உள்ளே நுழையவில்லை.   வீட்டை செய்தியாளர்களும் சூழ்ந்துக் கொண்டனர்.

செய்தியாளர்களிடம் வீடியோ காலிங் மூலம் பேசிய ரோகித் சிங் தனக்கு போன் சார்ஜரும்,  முத்திரைத் தாளும் தேவை என கூறி உள்ளார்.   அதைத் தருவது போல் அங்கு சென்ற காவல்துறையினர் அவரை ஏமாற்றி கைது செய்து அந்த பெண்ணை மீட்டுளனர்.

கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் செல்லும் வழியில் அவரை தடுத்த அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் ஆத்திரத்துடன் செருப்பாலடித்துள்ளனர்.   அவரை மீட்டு அழைத்துச் சென்ற காவலர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் அவருக்கு சிறை தண்டனை வாங்கித் தருமாறு கெஞ்சி உள்ளார்.