பெண்கள் துப்பட்டா அணிந்தால் மட்டுமே அரசு அலுவலகங்கள் செல்ல முடியும்: எங்கே தெரியுமா?

இஸ்லாமாபாத்:

பெண்கள் துப்பட்டா அணிந்தால் மட்டுமே அரசு அலுவலங்களுக்கு  செல்ல முடியும் என்று பாகிஸ்தானின் புதிய அரசான இம்ரான்கான் தலைமையிலான அரசு அறிவித்து உள்ளது. இது விவாத பொருளாக மாறி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் சமீபத்தில் பதவி ஏற்ற இம்ரான்கான் தலைமையிலான அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் டாக்டர் யாஸ்மீன். இவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். பழமை விரும்பும் இந்த அமைச்சர் பெண்கள் கட்டாயமாக துப்பட்டா அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

பாகிஸ்தான் அரசு பதவியேற்றதும்,  தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்திகள் இனி தணிக்கை செய்யப்படாது என்றும், டிவி, ரேடியோ ஆப் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அரசு ஊடக நிறுவனங்களின் ஆசிரியர் குழுவுக்கும் முழுமையான சுதந்திரம் அளிக்கப்படுவதாக, அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் சவுதாரி தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற அறிவிப்புகள் காரணமாக பாகிஸ்தான் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், பெண் அமைச்சர் யாஸ்மினின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் யாஸ்மின் ராஷித், பெண்கள் துப்பட்டா அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். அரசு அலுவலகங்களுக்கு பணி நிமித்தமாகவோ மற்றும் ஏதேனும் தேவைக்காக வரும் பெண்கள் கண்டிப்பாக துப்பட்டா அணிந்திருக்க வேண்டும் என்றும், துப்பட்டா அணியா விட்டால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்ட மாட்டார்கள் என்றும் உத்தரவிட்டு உள்ளார்.

பெண் அமைச்சர் யாஸ்மினின் உத்தரவுக்கு பாகிஸ்தான் பெண்களிடையே கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆனால், இஸ்லாமிய பழமைவாதிகள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

துப்பட்டா அணிந்து செல்ல வேண்டும் என்ற  இந்த புதிய உத்தரவு குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.இந்த உத்தரவைப் பிறப்பித்த பெண் அமைச்சர் யாஸ்மின் ராஷித்துக்கு எதிராகவும்  பெண்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர்.