அரேபிய பெண்களை பற்றி ஆபாசமாக கருத்து கூறிய பாஜக எம் பி : டிவிட்டரில் எதிர்ப்பு

பெங்களூரு

ர்நாடக மாநில பாஜக மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா அரேபியப் பெண்கள் குறித்து ஆபாசமான கருத்துக்களை தெரிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கர்நாடக மாநில பாஜக மக்களவை உறுப்பினரான தேஜஸ்வி சூர்யா நாட்டில் மிகவும் இளைய உறுப்பினர் ஆவார்.  இவருக்கு 28  வயது ஆகிறது. தேர்தலில் போட்டியிடும் போது இவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் முன் தாயார் காலில் விழுந்து ஆசி பெற்றது அப்போது மிக்வும் பேசப்பட்டது.  தாய்க்குலங்கள் என்றால் அவருக்குத் தனி மதிப்பு உண்டு என பாஜகவினர் கூறி வந்தனர்.

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் அபிமானத்தைப் பெற்ற தேஜஸ்வி சூர்யா தனது டிவிட்டரில் “கடந்த சில  நூறாண்டுகளாக 95% அரேபியப் பெண்கள் உடலுறவில் உச்சத்தை அடைந்தது இல்லை.  ஒவ்வொரு தாயும் தனது குழந்தைகளை அன்பினால் உருவாக்காமல் பாலியல் செயலால் மட்டும் உருவாக்குகின்றனர்” எனப் பதிந்துள்ளார்.

இது பெண்களிடையே கடும் கோபத்தைக் கிளப்பி உள்ளது.   அவரது டிவிட்டுக்கு பலரும் எதிர்ப்பு கருத்து தெரிவித்து வருகின்றனர்.   அவருடைய இளம் வயதுக்குத் தெரிவிக்கக் கூடாத கருத்துக்களை அவர் கூறி உள்ளதாகக் கண்டனம் எழுந்துள்ளது.

இது குறித்து  நூரா அல்குராய்ர் என்பவர் தனத் பதிவில், “இந்தியாவில் பல பெண் தலைவர்கள் இருந்தும் பெண்களுக்கு மரியாதை அளிக்க தெரியாமல் வளர்ந்துள்ள தேஜஸ்வி சூர்யா மீது நான் பரிதாபம் கொள்கிறேன்.   ஒருவேளை அரசு உங்களுக்கு வெளியுறவு அமைச்சர் பதவி அளித்தால் தயவு செய்து அரபு நாடுகளுக்குச் செல்லாதீர்கள் . அங்கு உங்களுக்கு வேறு விதமான வரவேற்பு கிடைக்கும்” எனப் பதிந்துள்ளார்.