அய்யப்பன் கோவில் விவகாரம்: பந்தள அரச குடும்பத்தினர், தந்திரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி

சபரிமலை:

பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் கேரள தேவஸ்தானம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்துவோம் என்று கேரள அரசு அறிவித்து உள்ளது.

அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து,  பந்தள அரச குடும்பத்தினர் மற்றும் ஐயப்பன் கோவிலில் பூஜை செய்து வரும் தந்திரிகளுடன் இன்று   திருவாங்கூர் தேவசம் போர்டு பேச்சுவார்ததை நடத்தியது.

ஆனால், பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் விவகாரத்தில், தந்திரிகளும், அரசு குடும்பத்தினரும் பிடிவாதமாக இருப்பதாகவும், அதே வேளையில் அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் பிடிவாதமாக இருந்து வருவதாலும் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து உள்ளது.

 

இதற்கிடையில், மாநில அரசு மற்றும் தேவசம் போர்டின் அறிவிப்பை எதிர்த்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.  அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வந்தால்…  என சில அமைப்பினர் மிரட்டி உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,அய்யப்பன் கோவிலில் வரும்18ந்தேதி முதல் ஐப்பசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக சில பெண்கள் சபரிமலை நோக்கி பயணமானார்கள். அவர்கள் தற்போது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பேச்சு வார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், சபரிமலை பகுதியில் காவல் துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சபரிமலை வரும் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பம்பையில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கேரள காவல்துறை அறிவித்து உள்ளது.