`துர்கா தேவிக்கு கொடுக்கும் மரியாதை, நாட்டின் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்!’  பிரதமர் மோடி

டெல்லி: `துர்கா தேவிக்கு கொடுக்கும் மரியாதை, நாட்டின் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்” என மேற்குவங்க மக்களிடையே காணொளி காட்சி மூலம் உரையாடிய  பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

துர்காபூஜையை முன்னிட்டு, கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில்,  ரபீந்திரநாத் தாகூரின் சுப்ரியோ பாட்டு ஒலிக்கப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர் பபில் சுப்ரியோ, பா.ஜ.க தலைவர்கள் முகல் ராய், விஜயவர்ஜியா போன்றோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில்  காணொளி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் மோடி,  வங்காள மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, வங்காள மக்களுக்கு துர்கா பூஜை வாழ்த்துகளை தெரிவித்தவர், இதுபோன்ற பூஜை மற்றும் விழாக்காலங்களில்,  சமூகஇடைவெளியை பின்பற்றவும்,  முகக்கவசம் அணிய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் துர்கா தேவிக்கு மக்கள் கொடுக்கும் மரியாதை நமது நாட்டின் பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,   `21-ம் நூற்றாண்டின் சிறந்த திட்டமான (ஆத்ம நிர்பான் பாரத் அபியான் ) சுயசார்பு இந்தியா திட்டம் வங்காளத்தில் இருந்தே பலப்படுகிறது. வங்காளத்தின் பண்பாடு, செயல், பெருமை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. பல்வேறு திட்டங்களின் கீழ் மக்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு பிரச்னைகளை கண்டு அதிலிருந்து தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளனர். கிழக்கில் உள்ள இந்தியாவை மேம்படுத்துவதற்கான உறுதியை ஏற்றுக்கொண்டுள்ளோம். அதை செயல்படுத்துவதில் வங்காள மக்கள் பெரிய இடம் வகிக்க வேண்டும்”

“ஜன்தன் திட்டத்தின் கீழ் 22 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். மேலும் முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று வருகின்றனர்” என்றும் குறிப்பிட்டார். “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், மகப்பேறு கால விடுமுறை 12 முதல் 26 வாரமாக வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்கான ஒவ்வொரு படிநிலைகளையும் எடுத்து வைத்து கொண்டு இருக்கிறோம்”, “துர்காதேவி தான் சக்தியின் அடையாளம், நமது அரசு என்றுமே பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் அவர்களின் அதிகாரத்திற்காகவும் பாடுபடுகிறது” என்றார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு துர்கா பூஜை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டாலும், உற்சாகமாக இருப்பதாக கூறியவர், “வங்காளத்தின் பூஜை இந்தியாவுக்கு ஒரு புதிய வண்ணத்தை அளிக்கிறது. கொரோனோ காலத்தில் துர்கா பூஜையை கட்டுப்பாட்டுடன் அனைத்து பக்தர்களும் கொண்டாடி நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டுள்ளனர். மக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், ஆனால் பக்தி ஒன்றாகவே உள்ளது. மகிழ்ச்சியும், பக்தியும் இன்னும் எல்லையற்றவை. இதுதான் உண்மையான வங்கம். நான் டெல்லியில் இருந்தாலும், இன்று நான் உங்கள் அனைவருடன் வங்காளத்தில் இருபது போன்றே உள்ளது”   “இந்தியாவின் வரலாற்றில் தேவை உணரப்பட்ட போதெல்லாம், வங்காளம் எப்போதுமே இந்தியாவுக்கு பாதையை வழிவகுத்து காட்டியுள்ளது. அத்தகைய வங்காளிகளின் பெயர்களை நான் கூறவேண்டும் என்றால் இந்நாளே முடிந்து விடும். ஆனாலும் பெயர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் சம்பவம் உட்பட பெண்களுக்கு எதிரான தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் பிரதமர் இத்தைகைய கருத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.