பெங்களூரு

தராபாத் பெண் மருத்துவர் பலாத்காரக் கொலையையொட்டி பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பெண்கள் மிளகு ஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத் நகரைச் சேர்ந்த பெண் மருத்துவர் நான்கு பேரால் கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்டார்.  அதன்பிறகு அவர் கொல்லப்பட்டு அந்த நால்வரும் அவரை எரித்துள்ளனர்.   இது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.  பெண்களில் பலர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சாட்டி வருகின்றனர்.  இதனால் தங்கள் பாதுகாப்புக்காக மிளகு ஸ்பிரேவை எடுத்துச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மிளகு ஸ்பிரே என்பது மிளகு மற்றும் மிளகாய்ப் பொடியில் ரசாயனம் மற்றும் அழுத்தமான காற்றைக் கொண்டு செய்யப்படுவதாகும்.   தங்களைத் தாக்க வருபவர்கள் முகத்தில் இதைப் பெண்கள் ஸ்பிரே செய்தால் அவர்கள் முகம் எங்கும் மிளகாய் மற்றும் மிளகுப் பொடி பட்டு கண்களைப் பாதிக்கும்.  அந்த நேரத்தில் பெண்கள் எளிதாகத் தப்பிக்கலாம்.

பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பல பெண்கள் இவ்வாறு தங்களுடன் மிளகு ஸ்பிரேவை எடுத்து வருவது வழக்கமாக இருந்தது.   ஆனால் இந்த ஸ்பிரே தீப்பிடிக்கும் தன்மை உடையதால் இதை மெட்ரோ ரெயிலில் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.  அத்துடன் இவ்வாறு எடுத்துச் செல்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படு வந்தது

இது குறித்துப் பல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.   தற்போது ஐதராபாத் பலாத்காரக் கொலைக்குப் பிறகு இந்த எதிர்ப்பு அதிகரித்தது.   இது பெண்களுக்கு ஒரு தற்காப்பு என்பதால் மிளகு ஸ்பிரே எடுத்துச் செல்ல ,தடை செய்யக் கூடாது எனப் பல பெண்கள் டிவிட்டரில் பதிந்து வந்தனர்.

இதையொட்டி பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி யஷ்வந்த் சவான் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக மிளகுஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதிக்க உள்ளதாகவும் அவ்வாறு எடுத்துச் செல்லும் பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.