மெக்கா

மெக்கா மசூதிக்குள் சில பெண்கள் சீக்குவன்ஸ் என்னும் விளையாட்டை விளையாடியதால் சவுதியில் பரப்பரப்பு உண்டாகியது.

இஸ்லாமியர்களின் புனித தலம் மெக்கா.   சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு செல்வதை இஸ்லாமியர்கள் ஹஜ் என்னும் புனிதப் பயணமாக கருதி வருகின்றனர்.   இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதும் ஒன்றாகும்.

இந்த மெக்காவில் உள்ள மசூதியில் அமர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று 4 பெண்கள் “சீக்குவன்ஸ்” என்னும் விளையாட்டை விளையாடி உள்ளனர்.   இது புகைப்படம் ஆக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.    இதை ஒட்டி சவுதி அரேபியா முழுவதும் பரபரப்பாகியது.    ஒரு சில பெண்ணிய வாதிகள் இதில் தவறில்லை எனக் கூறிய போதும், பெரும்பான்மையானவர்கள் இது தவறான செயல் என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மெக்கா மசூதி செய்தி தொடர்பாளர், “நான்கு பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மெக்கா மசூதியினுள் சீக்குவன்ஸ் என்னும் விளையாட்டை விளையாடியது குறித்து புகார்கள் வந்தன.   அந்த இடத்துக்கு பெண் நிர்வாகிகள் அனுப்பப்பட்டனர்.  அவர்கள் இந்தப் பெண்களை இவ்வாறு விளையாடுவது தவறு எனவும் மசூதியின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும் எனவும் எச்சரித்தனர்.   அந்தப் பெண்களும் அதற்கு ஒப்புதல் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்”  என அறிவித்துள்ளார்.