‘‘என் தோட்டத்து மாம்பழம் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும்’’…..இந்துத்வா தலைவர் அதிரடி

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்சை சேர்ந்தவர் சாம்பாஜி பிடே. சிவ் பிரதிஸ்தன் இந்துஸ்தான் என்ற இந்துத்வா அமைப்பின் தலைவர். முன்னாள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இவர் அடிக்கடி சிக்கலில் சிக்கிக் கொள்வார்.

இந்த வகையில் சமீபத்தில் இவர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ‘‘எனது பழத் தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை சாப்பிடும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். இந்த மாம்பழங்களில் ச க்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது. இது போல் எனது தோட்ட மாம்பழம் சாப்பிட்ட பல பெண்களுக்கு ஆண் குழந்தை பாக்கியம் கிடைத்தது’’ என்று தெரிவித்தார்.

இவரது அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாசிக் மாநகராட்சி நிர்வாகத்தின் ஆலோசனை குழு இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. கர்ப்பிணி வயிற்றில் இருப்பது ஆணா? பெண்? என்று கண்டுபிடித்து கூற ஸ்கேன் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை சட்டத்தை பிடே மீறியதாக புகார் எழுந்தது.

இது குறித்து நாசிக் மாநகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்த புனே சுகாதார துறை கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டார். மாநகராட்சி சுகாதார குழு இது குறித்து விசாரணை நடத்தி கமிஷனருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இது குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சாம்பாஜி பிடேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆலோசனை குழு முடிவு செய்துள்ளது.