ஏர்  இந்தியா விமானத்தில் மூட்டைப் பூச்சி : பெண் பகீர் புகார்

மும்பை

நியூயார்க்  – மும்பை ஏர் இந்தியா விமானத்தில் மூட்டைப் பூச்சிக் கடியால் தாம் அவதியுற்றதாக ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

ரெயிலில் மற்றும் பேருந்தில் மூட்டைப்பூச்சி தொல்லை இருப்பது மிகவும் சகஜமான ஒன்றாகி விட்டது.   ஆனால் விமானத்திலும் இது போல புகார்கள் வரத் தொடங்கி உள்ளது.   அதுவும் இந்திய அரசால் நடத்தப்படும் ஏர் இந்தியா விமானம் குறித்து ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

சென்ற வாரம்  சௌமியா ஷெட்டி என்னும் இந்தியப் பெண் நியூயார்க் நகரில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.  அவருடைய கைக்குழந்தை உட்பட அவருடைய மூன்று குழந்தைகளும் அவருடன் பயணம் செய்துள்ளனர்.   பிசினெஸ் வகுப்பில் பயணம் செய்த அவரும் குழந்தைகளும் மூட்டைப் பூச்சிக் கடியால் அவதிப்பட்டுள்ளனர்.

தனக்கு இருக்கை மாற்றச் சொல்லி அவர் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார்.    விமானம் மும்பையில் இறங்குவதற்கு சிறிது நேரம் முன்பு  அவருக்கு இருக்கை மாற்றி உள்ளனர்.  அதற்குள் அவருக்கும் அவர் குழந்தைகளுக்கும் மூட்டைப் பூச்சி கடியால் உடல் எங்கும் தடிப்புக்கள் உண்டாகி விட்டன.

இது குறித்து தனது உடலில் உள்ள தடிப்புகளின் புகைப்படத்துடன் டிவிட்டர் மூலம் ஏர் இந்தியாவுக்கு அவர் புகார் அளித்துள்ளார்.   அதே விமானத்தில் பிசினெஸ் வகுப்பில் பயணம் செய்த மற்றொரு பயணியான பிரவின் என்பவரும் தானும் தன் குடும்பத்தினரும்  மூட்டைப் பூச்சிக் கடியால் அவதியுற்றதாக புகார் அளித்துள்ளார்.

இந்த இரு புகார்களுக்கும் ஏர் இந்தியா நிறுவனம் டிவிட்டரில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.   இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி விமான சுகாதாரத்தில் கவனமாக இருப்பதாக உறுதி அளித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி