சுயமரியாதை உடைய பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டால் இறந்துவிடுவாள்! கேரள காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு…

திருவனந்தபுரம்:  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர், சுய மரியாதை உடைய பெண்ணாக இருந்தால், இறந்து விடுவாள் என  கேரள காங்கிரஸ் தலைவரான முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறியது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் சிக்கி உள்ள பினராயி விஜயன் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வலியுறுத்துவது தொடர்பாக, எதிர்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் கேரள தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.  முந்தைய காங்கிரஸ் தலைமையிலான  ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)  அரசாங்கத்தின் பல தலைவர்களும் அமைச்சர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய ஒரு பெண்ணை (சரிதா நாயரை ) ”பாலியல் தொழில் செய்பவர்” என்று குறிப்பிட்டு,பேசியதுடன்,அவரை   வைத்து, கதைகளை கட்டி தப்பித்துக் கொள்ள முதல்வர் நினைக்க கூடாது என எச்சரித்தார்.

மெலும்,  ”அந்த பெண், மாநிலம் முழுவதும், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புலம்பியிருந்தார்.  ஆனால், அவர், ஒரு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சொன்னால் ஒருவர் புரிந்து கொள்ள முடியும், ஆனால்  அவர் பலமுறை இதுபோன்று கூறியிருக்கிறார், அவர்  சுய மரியாதை உள்ளவராக இருந்தால், இறந்துவிடுவாள்.  ஆனால், அது மீண்டும் நடக்காது என்பதை நம் சமூகம் உறுதிப்படுத்தும் என்றார்.   பெண்களுக்கு எதிராக அவர் வெறுக்கத்தக்க வகையில் பேசியது  நேரடியாக ஒளிபரப்பானது.  இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள காங்கிரஸ் கட்சி தலைவரின் பேச்சுக்கு  பல காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டம் தெரிவித்துள்ளதுடன்,  தன்னுடைய கருத்திற்கு நிபந்தயனையற்ற வருத்தங்களை தெரிவித்தார் ராமச்சந்திரன்,  “எனது கருத்துக்களின் சில பகுதிகள் பெண்களுக்கு விரோதமாகக் கருதப்பட்டதால், எனது வருத்தத்தை நிபந்தனையின்றி வெளிப்படுத்துகிறேன்,’ ’என்றார்.

இருப்பினும் அவர் மீது கேரள மகளிர் ஆணையம் புகார் பதிவு செய்துள்ளது. அரசியல்வாதிகள் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வைக்கும் கருத்துகள் கேரளத்திற்கு அவமானம். இது போன்ற கருத்துகள் இனி அனுமதிக்கப்பட கூடாது. அவர் மன்னிப்பு கேட்பது அப்படி ஒன்றும் உண்மையாக இல்லை என்று அந்த ஆணையத்தின் தலைவர் எம்.சி. ஜோஸ்பின் அறிவித்துள்ளார்.

மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் மட்டுமே இப்படியான கருத்துகளை பகிர முடியும். தற்கொலை செய்து கொள்ளாத பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு சுயமரியாதை இல்லையா? அதை அவர் அந்த அர்த்தத்தில் தான் கூறினாரா? அரசியல்வாதிகள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்க கூடாது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.

கடந்த  2013ம் ஆண்டு  கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, சோலார் பேனர் ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சிக்கிய, சரிதா நாயர்,  காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சருமான ஏ.பி.அனில் குமார் அவரை பல்வேறு சூழலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியிருந்தார். அதை குறிப்பிட்டு முல்லப்பள்ளி ராமச்சந்திரன்  தற்போது பேசியது  சர்ச்சையாகி உள்ளது.