டெர்பி:

நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதிக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் ஏற்கனவே முன்னேறிவிட்டன.

டெர்பியில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் வென்றால் மட்டுமே அரையிறுதி என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு பூணம் ராத் (4) அதிர்ச்சி தந்தார். மந்தனா 13 ரன்களில் அவுட் ஆனார். 17.5 ஓவரில் மழை குறுக்கிட போட்டி நிறுத்திவைக்கப்பட்டது. 25 நிமிடங்களுக்குப்பின், மீண்டும் போட்டி தொடங்கியது.

கேப்டன் மிதாலி, ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஹர்மன்பிரீத் (60) அரை சதம் கடந்தார். பின், வந்த வேதா அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். மிதாலி (109) ஒரு நாள் அரங்கில் 6வது சதம் எட்டினார். வேதா 70 ரன்களில் அவுட்டானார். முடிவில், இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது.

சற்று கடின இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே இந்திய பவுலர்கள் தொல்லை தந்தனர். சுசி பேட்ஸ் (1), ரச்செல் (5) ஒற்றை இலக்கில் திரும்பினர். தீப்தி சர்மா ‘சுழலில்’ கெட்டே மார்டின் (12) சிக்கினார். ராஜேஸ்வரி பந்தில் சட்டர்த்வெய்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றவர்களும் ஏமாற்ற, நியூசிலாந்து அணி 25.3 ஓவரில் 79 ரன்களுக்கு அனைவரும் அவுட் ஆகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ராஜேஸ்வரி 5 விக்கெட் வீழ்த்தினார்.