லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய பெண்கள் அணியுடன், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் மிதாலி ராஜ் மட்டுமே 50 ரன்கள் அடித்தார். அவர் அதற்கு 85 பந்துகளை எடுத்துக்கொண்டார்.

ஹர்மன்பிரீத் கவுர் 40 ரன்களையும், தீப்தி ஷர்மா 27 ரன்களையும் அடிக்க, 50 ஓவர்கள் தக்குப்பிடித்த இந்திய அணி, 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

50 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தால் போதும் என்ற எளிதான நிலையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், துவக்க வீராங்கனைகளே வேலையை முடித்துவிட்டார்கள்.

துவக்க வீராங்கனை லீ, 83 ரன்களையும், லாரா 80 ரன்களையும் அடித்து வெற்றியை உறுதிசெய்தார்கள். தற்போது இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.