என்று பிறந்தேன்?

நீ கூற அறிந்தேன்!

எது உணவு?

உனது உதிரம் அன்று!
என் விலாசம் என்ன ?
நீ அடையாளப்படுத்தினாய்!
பள்ளிப்படிக்க ?
உன் தாலியும் சேர்ந்து படித்தது !

சோர்ந்து வந்தேன்
தோளாய், தமக்கையாய் நின்றாய் !
வம்பு வளர்த்தேன்,
காப்பரணாய் நின்றாய் !
வேடிக்கை செய்தேன்,
வாடிக்கை என்றாய் !
படித்தே முடித்தேன்
குடும்பமே இளைத்து நின்றது!

ஊர் தண்டசோரென்றது
நீ மெலிந்தேன் என்றாய் !
வேலை வாவா என்றது
அவ்வளவு தூரமென்றாய் !

அகவை வந்தது
மனையில் வந்தாய் !
மிடுக்கில் திரிந்தேன்
பொறுமையாய் தாங்கினாய் !
தோற்று வந்தேன்
மீண்டு வருவேன் என்றாய் !
துவண்டு நின்றேன்
துணிவாய் தோள் தந்தாய் !
மீண்டு வந்தேன்
ஈன்று தந்தாய் தந்தையாய் என்னை !

இருண்ட உலகமென்றேன்
வசந்தம் நானென்றாய் !
வசவுமொழி என்றேன்
தேன்மொழி சுவைத்தந்தாய் !
களைத்து திரும்பினேன்
திளைக்க அன்பிட்டாய் !

தாய் , தமக்கை,
தாரம், மகளாக,
எத்தனை வண்ணங்கள் நீ !

நான் யாரென்றால் ?
சத்தியம் நானறியேன் !
நான் யாரால் என்றால் ?
சத்தியம் பெண்ணாலென்பேன் !
பெண்ணே நீ வாழ்க !

சிறப்பு கவிதை – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்