48 நாட்கள் விரதம் காரணமாகவே சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில்லை: உச்சநீதி மன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்

டில்லி:

48 நாட்கள் விரதம் இருந்துதான் அய்யப்பனை  தரிசிக்க சபரி மலை செல்ல வேண்டும். அதன்  காரணமாகவே சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்று  உச்சநீதி மன்றத்தில் சபரிமலை தேவசம் போர்டு விளக்கம்  அளித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இநத வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும்,  ஆண்களைப் போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் நீதிபதிகள் கூறினார்.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தேவசம் போர்டு சார்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கோவிலுக்கு 48 நாட்கள் கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறி உள்ளது.

இதுகுறித்த விவாதத்தின்போது  தேவசம்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ‘சபரிமலையில் ஐயப்ப சாமியை தரிசனம் செய்ய பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களால் 48 நாட்கள் விரதமிருக்க முடியாது என்பதால், அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவல்லை’ என கூறினார்.

இதையடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.