பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய காலஅவகாசம் ஜன. 20 வரை நீட்டிப்பு!

சென்னை:

சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய ஜனவரி 20ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 31ந்தேதி வரை அவகாசம் வழங்கிய நிலையில், தற்போது மேலும் 20 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறார் விடுதிகள், ஆதரவற்றோர் விடுதிகள், பெண்கள் விடுதிகள் என பல விடுதிகள்  தனியார்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பாலியல் தொல்லைகள் ஏற்படுவதாகவும் ஏராளமான புகார்கள் பதிவாகி உள்ளன. இதையடுத்து, சென்னையில் செயல்பட்டு வரும் விடுதிகள் குறித்து உடனே அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதுகுறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், விடுதி நடத்துபவர்கள் அரசின் சமூக நலத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்று  புதிய வழி காட்டு நெறிமுறைகளை அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ந்தேதி கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் விடுதிகளை பதிவு செய்ய இதுவரை 450 விண்ணப்பங்கள் அஞ்சல் மற்றும்  மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்டு உள்ளதாகவும்,  மேலும், விடுதிகளை பதிவு செய்வதில் உள்ள சந்தேகங்கள் பற்றி ஜனவரி 8ம் தேதி விளக்கம் அளிக்க இருப்பதால், அதற்கான கால அவகாசம் ஜனவரி 20ந்தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.