2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் டி-20 சேர்ப்பு! ஐசிசி தகவல்

டில்லி:

2022ம் ஆண்டு நடைபெற உள்ள  காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மகளிர் டி-20 போட்டி சேர்க்கப்பட்டு இருப்பதாக ஐசிசி அறிவித்து உள்ளது.

2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்காமில்  நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  காமன்வெல்த்தில் மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் இணைக்கப்பட்டு இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு ஆகியவை உறுதி செய்துள்ளன.

அந்த வகையில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் 8 அணிகள் காமன் வெல்த் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன. அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊக்குமருத்து தடை அமைப்பின் விதிமுறைகளுக்குள் பல ஆண்டுகளாக வராத இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), கடந்த மாதம் தேசிய ஊக்குமருத்து தடை அமைப்பின் விதிமுறை களுக்கு ஒத்துக்கொண்டது. இதையடுத்து,  2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க உள்ளதாக  எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங்  தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.