மகளிர் கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

டெர்பி:

ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று டெர்பி நகரில் நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பூனம் ராவத் (47), விக்கெட் கீப்பரான சுஷ்மா தேவி (33) மற்றும் தீப்தி சர்மா (28) ரன்கள் எடுத்தனர். மந்தனா (2), மிதாலி ராஜ் (8), ஹர்மன்பிரீத் கவுர் (10), மோனா (5), ஜூலான் கோஸ்வாமி (14), ஏக்தா பிஷ்த் (1) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

மான்சி 4 மற்றும் பூனம் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியின் முடிவில், முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் நஹீதா கான் 23 ரன்கள், சனா மீர் 29 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 74 ரன்கள் எடுத்தது. இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டிகளில் இந்தியா தொடர்ந்து 3 வெற்றிகள் பெற்றுள்ளது.