உலககோப்பை டி20: அபார பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய மகளிரணி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலககோப்பை டி20 போட்டியில் இந்திய மகளிரணி 48 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று அசத்தியுள்ளது.

6வது மகளிர் உலககோப்பை டி20 தொடர் தென் அமெரிக்காவின் கயானாவில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேச அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

world

இந்த தொடரில் நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தின. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

போட்டி தொடங்கியதும் இந்திய அணி வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் தானியா பாட்டியா முதலில் களமிறங்கினர். போட்டியின் ஆரம்பத்திலேயே தானியா பாட்டியா பெவிலியன் திரும்ப, ஸ்மிருதி மந்தனா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன்களை எடுத்தார். இதேபோல் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அசத்தினார். இதையடுத்து, இந்திய மகளிரணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பிறகு 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்ட வீராங்கனைகள் பெத் மூனி மற்றும் எலீஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள், இந்திய மகளிரணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன் காரணமாக அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணி வீராங்கனை அஞ்சலி படேல் அதிகபட்சமாக 3விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீப்தி ஷர்மா, ராதா யாதவ் மற்றும் பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் இந்திய மகளிரணி 48 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.