லக்னோ: அயோத்தி தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வுக்கு செல்ல மாட்டோம் என்று உத்தரப் பிரதேச சன்னி வக்பு வாரியம் அறிவித்திருக்கிறது.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலம், இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது. இதற்கு பல தரப்புகளில் இருந்தும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.

தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்பதால் மறு சீராய்வுக்கு கோரிக்கை விடுக்க சன்னி வக்பு போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, இந்த விவகாரத்தில் பரபரப்பு நிலவியது.

இந் நிலையில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை ஏற்று கொள்வதாகவும், அதை எதிர்த்து மறு சீராய்வுக்கு செல்ல போவதில்லை என்று உத்தரப்பிரதேச சன்னி வக்புபோர்டு  அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ஜூபார் பரூக்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: மேன்மைதாங்கிய உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தாழ்மையுடன் வரவேற்கிறோம். இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மறு சீராய்வுக்கு முறையிட போவதில்லை.

சன்னி வக்புபோர்டு மறு சீராய்வு செய்யும் என்று எந்த தனி நபரோ அல்லது வழக்கறிஞரோ அல்லது அமைப்புகளோ அறிவித்தால் அது எங்களின் கருத்து அல்ல. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் என்று கூறி இருக்கிறார்.