மேற்கு வங்காளத்தில் என்ஆர்சி கிடையாது! மம்தாவின் கடும் எதிர்ப்பினால் பின்வாங்கிய பாஜக….

கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC) அமல்படுத்தப்படாது என்று மாநில பாஜக தலைவர் அறிவித்து உள்ளார். மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, பாஜக தனது முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக, அசாம் மாநிலத்தில் வாழும் இந்தியக் குடிமக்களை கண்டறியவும், அசாமில் சட்டபூர்வமற்ற வாழும் வேற்று நாட்டு குடிமக்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்களை கண்டறிந்து வெளியேற்றவும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஆனையின் பேரில், 2013-வது ஆண்டு முதல் அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கும் பணி துவங்கியது.

அசாமில் கடந்த சில மாதங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி), 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலவையில் உள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேறு நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில்,  மேற்கு வங்க மாநிலத்திலும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் வசித்துவருவதாக கூறப்படுகிறது. அவர்களும் என்ஆர்சி பட்டியல்படி வெளியேற்றப்படுவார்கள் என்று பாஜக கூறி வந்தது.

ஆனால், இதற்கு மாநிலத்தை ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்  மம்தா பானர்ஜி, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மத்திய அரசு என்ஆர்சி -ஐ மேற்குவங்கத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அப்படி அவர்கள் மீறி முயன்றால், தன்னை தாண்டித்தான் மக்களைத் தொட முடியும் என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், வங்காளத்தில் என்.ஆர்.சி.அமல்படுத்தியே தீருவோம் என்று அடம்பிடித்து வந்த பாஜக தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி உள்ளது.  சமீபத்தில் பேசிய பிரதமர் மோடியும், என்ஆர்சி அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டாது என்று தெரிவித்திருந்தார். அதை உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதிபடுத்தி இருந்தார். இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள், வங்காளத்தில் என்ஆர்சி அமல்படுத்தப்படாது என்று  மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோஷ்,  என்.ஆர்.சி “எதிர்காலம் சார்ந்த விஷயம்” என்று தெரிவித்தவர்,  இது வங்காளத்தில் அமல்படுத்தப்படாது என்று தெரிவித்து உள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக என்.ஆர்.சி அசாமில் செயல்படுத்தப்பட்டது என்று தெரிவித்தவர், இது தெளிவுபடுத்தப்பட வேண்டும், என்.ஆர்.சி.யை ராஜீவ் காந்திதான் முதலில் கொண்டுவர நினைத்தார், ஆனால், காங்கிரஸ் கட்சி  இப்போது “அதிலிருந்து விலகி, பாஜக மீது குற்றம் சாட்ட முயற்சிக்கிறது…  என்று கூறியவர்,  “நாடு தழுவிய என்.ஆர்.சி தேவைப்பட்டால், மத்திய அரசு அதைப் பற்றி சிந்திக்கும்” என்றும் தெரிவித்தார்.

குடியுரிமை (திருத்த) சட்டம், 2019 (சி.ஏ.ஏ) குறித்து  கூறிய கோஷ், “இது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளதால், நாட்டிலும் வங்காளத்திலும் செயல்படுத்தப்படும்” என்றார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு என்ஆர்சி குறித்து பேசிய  திலிப்கோஷ்,  வங்காளத்தில் என்.ஆர்.சி தவிர்க்க முடியாதது என்றும், மாநிலத்தில் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் மேற்குவங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கடுமையான தோல்வியை சந்தித்த நிலையிலும், சமீப காலமாக வட மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்து,  தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.