பாட்னா:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியதால், அண்டை மாநிலங்கள், மற்றும் மாவட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் கடுமையான அவஸ்தைகளுக்கு ஆளாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தொழில் நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் உள்பட ரயில், பஸ் போக்கு வரத்துக்கள் தடை செய்யப்பட்டு உள்ளன.

அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள், ஆம்புலனஸ் மற்றும் பால் போன்ற பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நாடு முழுவதும் பரவியுள்ள பீகார் மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர். மத்திய மாநிலஅரசுகள், இதுகுறித்து முறையான முன்னறிவிப்பு  செய்யாத நிலையில், திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பல பீகாரிகள், அந்த வழியாக பால் இறக்கிவிட்டு வந்த காலி பால் டேங்கர் லாரியின் டேங்கருக்குள் அமர்ந்து, சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளது…

பால் டேக்கரின் மூடி, மூடப்பட்டு இருந்த நிலையில், மூச்சுவிடக்கூட சிரமப்பட்டுகடுமையான அவஸ்தைகளுடன் அவர்கள் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.