தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை – குறைந்துவிட்ட பணிபுரிவோர் எண்ணிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் பணிபுரியும் ஆண்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, பெரிய சரிவை சந்தித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 1993 – 94ம் ஆண்டு காலகட்டத்தில், நாட்டில் பணிபுரியக்கூடிய ஆண்களின் எண்ணிக்கை 21.9 கோடி என்ற அளவில் இருந்தது.

பின்னர் அந்த எண்ணிக்கை, 2011 – 12ம் ஆண்டு காலகட்டத்தில் 30.4 கோடி என்ற அளவில் அதிகரித்திருந்தது. ஆனால், 2017 – 18ம் ஆண்டு காலகட்டத்திய விபரங்களின்படி, பணிபுரியும் ஆண்களின் எண்ணிக்கை 28.6 கோடி என்ற அளவிலேயே உள்ளது.

இந்த சரிவானது, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ளது. நாட்டில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை இது எதிரொலிப்பதாக கூறப்படுகிறது.

வேலை வாய்ப்பின்மை பிரச்சினை நகர்ப்புறங்களில் 7.1% என்ற அளவிலும், கிராமப்புறங்களில் 5.8% என்ற அளவிலும் உள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது, கடந்த 1993 – 94ம் ஆண்டு காலகட்டத்தைவிட அதிகம்.

– மதுரை மாயாண்டி