உலக ஆஸ்துமா தினம்

உலகம் முழுவதும் ஆஸ்துமா தினம் ஆண்டு தோறும் மே மாதம் முதல் செவ்வாய்கிழமை  கடைபிடிக்கப்படுகிறது. ஆஸ்துமா நோய்க்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா நோய் ஏற்படுவதால் மூச்சுக்குழலில் உள்ள சுவாச சிறுகுழல் சுருக்கம் ஏற்படுகிறது. நுரையீரலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. இதனால், மூச்சு திணறல் உண்டாகிறது. இந்நோயினால் உலகம் முழுவதும் 235 மில்லியன் மக்கள்  பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் 15- 20 மில்லியன் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆஸ்துமா என்பது, மூச்சுக்காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் சுவாசக்குழாயைப் பாதிக்கும் ஒரு ஒவ்வாமை நோயாகும். சுவாசக்குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும் போது விசில் போன்ற சத்தம் கேட்கிறது. நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. மூச்சிரைத்தல், இருமல், மார்புப் பகுதி இறுக்கமாதல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை நோயின் பொதுவான அறிகுறிகள்.

செல்லப் பிராணிகளின் ரோமம், துாசி, துாசியிலுள்ள சிறு பூச்சி, கரப்பான் பூச்சியின் கழிவுகள், மரங்கள் மற்றும் பூக்களின் மகரந்தத் துாள், மேல் பூச்சுப் பொருட்கள், சிகரெட் புகை, காற்றில் உள்ள மாசு, குளிர்ந்த காற்று, வெப்பநிலை மாற்றம், வண்ணப்பூச்சு பொருள் மற்றும் சமைக்கும்போது வரும் புகை, வயிறு மற்றும் உணவுக்குழாய்ப் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது போன்றவை, ஆஸ்துமாவின் பாதிப்புகளை அதிகமாக்கி மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.

வேதியப் பொருட்கள், நோய்த் தொற்று, குடும்பப் பின்னணி மற்றும் புகையிலையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதனால் ஆஸ்துமா வரும்.

ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், உலக ஆஸ்துமா தினம், ஒவ்வோர் ஆண்டும், மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையன்று  கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆஸ்துமா நோய் பரம்பரையாகவும் (மரபணு கோளாறு), சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்படுகிறது. பெரும்பாலும் சிகரெட் புகையினாலும், காற்று மாசுபாட்டினால் ஆஸ்துமா நோய் தாக்குகிறது. மேலும், மாறி வரும் வாழ்க்கை முறைகளான பாஸ்புட், உடலில் பவுடர் மற்றும் வாசனை திறவங்களை போடுவதால் ஆஸ்துமா ஏற்படுகிறது. ஆஸ்துமா நோயின் தன்மை மற்றும் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும். நோயினை முழுமையாக குணப்படுத்த முடியாது. சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நீண்ட நாள் வாழலாம்.

இந்நோய்க்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். கடந்த 10 ஆண்டில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. ஆஸ்துமா நோய் நாட்டிற்கே பெரிய சவாலாக இருக்கிறது. பெரியவர்களை விட இளைஞர்கள் தான் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களால் (வைரஸ் கிருமிகள்) நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இதனாலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளாலும் குழந்தைகள் சுவாசிக்க மிகவும் கஷ்டப்படுகின்றனர். நெஞ்சிலே சளி தங்கி விடுகிறது. இதனால், குழந்தைகள் எளிதில் ஆஸ்துமா நோய்க்கு உள்ளாகின்றனர். மொத்த குழந்தைகள் எண்ணிக்கையில் 10 சதவீதம் குழந்தைகள் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காசநோயினால் பாதிக்கப்பட்டவர்களையும், சிகரெட் பழக்கம் உள்ளவர்களையும் ஆஸ்துமா எளிதில் தாக்கும். சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்தால், மூச்சு திணறல் ஏற்பட்டு ஆஸ்துமா நோய் தாக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயம் நுரையீரல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏழு அறிவுரைகள்:
தொடர் உடற்பயிற்சி
ஆரோக்கியமான உணவு
மாசு நிறைந்த பகுதியில் இருந்து விலகி இருத்தல்
புகிப் பழக்கத்தை கைவிடுதல்
எதிர்ப்பு சக்தி மருந்து
காற்று வடிகட்டி
ஆஸ்துமா மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளுதல்.