லண்டன்:

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் லண்டனில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் 4*100 மீட்டர் ரிலே இறுதி போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்தது. இதில், 37.47 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த பிரிட்டன் அணி தங்க பதக்கம் வென்றது.

அமெரிக்கா வெள்ளி பதக்கமும், ஜப்பான் வெண்கல பதக்கமும் வென்றன. ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உசைன் போல்ட் அடங்கிய ஜமைக்கா அணிக்கு எந்த பதக்கமும் கிடை க்கவில்லை. போட்டியின்போது உசைன் போல்ட்டுக்கு திடீரென ஏற்பட்ட தசை பிடிப்பே இதற்கு க £ரணமானது.

ஜமைக்கா அணியின் முதல் 3 வீரர்களான ஒமர் மெக்லியாட், ஜூலியன் போர்டி, யோகன் பிளாக் ஆகியோர் சரியாக பேட்டனை (கோல்) பாஸ் செய்து கொண்டே வந்தனர். கடைசியாக யோகன் பிளாக்கிடம் இருந்து பேட்டனை பெற்ற உசைன் போல்ட் விரைவாக ஓட தொடங்கினார். அப்போது ஜமைக்கா அணி 3வது இடத்தில் இருந்தது.

எனினும் உசைன் போல்ட் விரைவாக ஓடி எதிரணிகளை வீழ்த்தி விடுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. பந்தய தூரத்தை எட்ட 30 மீட்டர் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில் உசைன் போல்ட்டின் இடது தொடையில் திடீரென தசை பிடிப்பு ஏற்பட்டது.

இதனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதற்குள்ளாக பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் வீரர்கள் விரைவாக ஓடி பந்தய தூரத்தை கடந்து விட்டனர். அதற்கு மேல் உசைன் போல்ட்டால் ஓட முடியாததால், ஜமைக்கா அணி போட்டியை நிறைவு செய்யவே இல்லை.

ஈடு இணையற்ற உசைன் போல்ட்டின் கேரியர் தோல்வியுடன் நிறைவு பெற்றுள்ளது. ஆம், இதுதான் உசைன் போல்ட்டின் கடைசி பந்தயம். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக உசைன் போல்ட் ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த 5ம் தேதி நடந்த 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இவர் வெண்கல பதக்கமே வென்றிருந்தார்.

எனவே கடைசி பந்தயமா 4*100 மீட்டரில் தங்க பதக்கம் வென்று வெற்றியுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் உசைன் போல்ட்டின் ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து சக வீரர் ஜூலியன் போர்டி கூறுகையில், ‘’எங்களிடம் உசைன் போல்ட் மன்னிப்பு கேட்டார். அதற்கு அவசியம் இல்லை என்று நாங்கள் தெரிவித்தோம். காயம் என்பது விளையாட்டின் ஒரு பகுதி தான்’’ என்றார். ஒமர் மெக்லியாட் கூறுகையில், ‘’எதிர்பாராத விதமாக இது நடந்து விட்டது. உசைன் போல்ட்டின் பெயர் எப்போதும் நிலைத்திருக்கும்’’ என்றார்.