ரோஹிங்கியா அகதிகளுக்கு 480 மில்லியன் டாலர் வழங்க உலக வங்கி முடிவு


வங்காளதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்காக 480 மில்லியன் டாலர் வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது. தாய்-சேய் நல பாதுகாப்பு, ஊட்டச்சத்து தேவைகள், சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை ரோஹிங்கியா முஸ்லீம்கள் பெறுவதற்காக இத்தகைய முடிவை உலக வங்கி எடுத்துள்ளது. வியாழக்கிழமை உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ரோஹிங்கியா அகதிகள் கல்வி, நீர், மருத்துவம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்டவைகள் பெறுவதற்காக மானியமாக உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
rohinya-refugees
இதற்கு முன்பு 50 மில்லியன் டாலர் தொகையை மட்டுமே வழங்கி வந்த உலக வங்கி முதல் முறையாக மானிய தொகையை 480 மில்லியன் டாலர் வரை உயர்த்தியுள்ளது. கனடாவுடன் இணைந்து ரோஹிங்கியா அகதிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த தொகையை வழங்க முன்வந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகில் உள்ள ஏழ்மையான நாட்டிற்கு அளிக்கப்படும் வங்கி நிதியில் இருந்து ரோஹிங்கியா அகதிகளுக்கு 400 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மியான்மரில் நடைபெற்ற வன்முறை காரணமாக 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் தஞ்சம் அடைந்தனர். இது உலகில் வேகமாகவும், மிக அதிகளவிலும் அகதிகள் தஞ்சம் அடைந்த முகாமாக உள்ளது.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் கூறுகையில் ‘ ரோஹிங்கியா மக்களின் துன்பத்தில் நாம் ஆழமாக மூழ்கியுள்ளோம். அவர்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் தங்கள் வீடுகளுக்கு திரும்புவதற்கு உதவ நாம் தயாராக உள்ளோம்’ என்று தெரிவித்தார். ரோஹிங்கியா அகதிகளின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் மக்கள் தொகைக்கான சேவைகளை வழங்க 5 கூடுதல் டாலர்களை வழங்க முன்வந்துள்ளதாக கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூலை 1 மற்றும் 2ம் தேதி வங்காளதேசம் செல்ல உள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸ் அங்குள்ள நிதி நெருக்கடியை மதிப்பிடவும், அகதிகளுக்கான தேவைகள் குறித்து ஆலோசிக்கவும் திட்டமிட்டுள்ளார்.