சவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் பயணித்த விமானத்தில் தீ

ரோஸ்டோவ்: சவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் பயணித்த விமானத்தின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக அவர்கள் எந்தவித காயமும் இன்றி தப்பினர்.

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் சவுதி அரேபியாவும் கலந்துகொண்டுள்ளது.

துவக்க ஆட்டத்தில் ரஷ்யாவுடன் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோல்வியடைந்தது. இந்த நிலையில், அடுத்த போட்டியில் உருகுவேவிற்கு எதிராக விளையாட இருக்கிறது.

புதன்கிழமை நடைபெற உள்ள இப்போட்டியில் பங்கேற்க சவுதி வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். ரஷ்யாவின் ஏர்பஸ்  ஏ319 ரக விமானத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருந்து ரோஸ்டோவ்-ஆன்-டான் நகருக்கு அவர்கள் விமானத்தில் நேற்று பயணித்தனர். அப்போது  விமானம் தரையிறங்கிய நேரத்தில் இன்ஜினில் தீ பிடித்தது. இதையடுத்து அவசரமாக வீரர்கள் வெளியேற்றப்பட்டு தீ அணைக்கப்பட்டது.

விபத்து குறித்து நடந்த முதல்கட்ட விசாரணையில் பறவை மோதியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.