கான்பெரா

லகக் கோப்பை 2019 க்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பல புகழ்பெற்ற வீரர்கள் இடம் பெறவில்லை.

உலகக் கோப்பை 2019 தொடங்க உள்ளதை ஒட்டி கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொரு நாட்டின் அணி குறித்தும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.    குறிப்பாக கிரிக்கெட் ஜாம்பவான்களான ஆஸ்திரேலிய நாட்டு அணியின் வீரர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.  இன்று ஆஸ்திரேலியா தனது உலகக் கோப்பை கிரிக்கெட் அணி வீரர்களை அறிவித்துள்ளது.

இந்த அணியில் ” ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஜேஸன் பெஹாரன்ஆஃப், அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்), நாதன் குல்டர் நில், பேட் கமின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஜெ ரிச்சர்ட்சன், ஸ்டிவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.” ஆகிய 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மற்றும் துணைத் தலைவரான ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாரில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தனர்.   ஒரு வருடம் ஆன பிறகும் கடந்த மாதம் அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் அணியில் இவர்கள் சேர்க்கப்படாமல் இருந்தனர்.   தற்போதைய உலகக் கோப்பை அணியில் இருவரும் இடம்  பெற்றுள்ளனர்.

ரசிகர்கள் அவலுடன் எதிர்பார்த்த பீட்டர் ஹாண்ட்ஸ் கோம்ப், ஜோஸ் ஹசில்வுட், டான்சி ஷார்ட், கானே ரிச்சர்ட்சன், ஆஸ்டன் டர்னர்,  மேதிவ் வேட் உள்ளிட்ட வீரர்கள் இந்த அணியில் இடம் பெறவில்லை.    இதில் பீட்டர் ஹாண்ட்ஸ் கோம்ப் இந்தியாவுக்கு எதிரான தனது முதல் போட்டியில்  சதம் அடித்து தனது புள்ளிகளை 43 ஆக உயர்த்திய போதிலும்  ஸ்மித் மற்றும் வார்னர் அணியில் சேர்க்கப்பட்டதால் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அதே நேரத்தில் ஹாண்ட்ஸ்கோம்ப் இன் வெகுநாளைய கனவான உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத போதிலும் அவர் ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம் பெற்று இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளார்    அதைப் போல் ஜோஸ் ஹசில்வுட் காயமடைந்த காரணத்தால் உலகக் கோப்பை அணியில் இடம் பெறவில்லை எனினும் ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம் பெற்றுள்ளார்.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜெ ரிசர்ட்சன் ஆகியோருக்கு தகுதி தேர்வு (FITNESS TEST) நடத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.  உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா தனது லீக் போட்டியை வரும் ஜூன் 1 ஆம் தேதி விளையாடுகிறது.   இந்த பந்தயத்துக்கு முன்பு தகுதி தேர்வில் இவர்கள் இருவரும் கலந்துக் கொள்ள வேண்டி வரும்.  இந்த லீக் பந்தயத்தில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான் உடன் மோதுகிறது.