லண்டன்:

லக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் 30ந்தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று  15வது லீக் போட்டி மாலை 3 மணிக்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவு அணிகளுக்கு  இடையே சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்குஇந்திய தீவு அணி, அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் தனது திறமையை மீண்டும் நிரூபிக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது 105 ரன்னில் சுருட்டி பந்தாடிய வெஸ்ட் இன்டீஸ் அணி,  அடுத்த ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த நிலையில், இந்தியாவிடமும் சரணடைந்தது. இந்த நிலையில், இன்று தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது

பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இதுவரை எதிர்கொண்ட இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா அணிகளுடனான போட்டியில், தொடர் தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இன்று வெஸ்ட் இன்னிஸ் அணியை எதிர்கொள்கிறது.

எஞ்சிய 6 ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்க அணி, வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை எட்ட முடியும் என்ற நெருக்கடியில் இன்றைய போட்டியை சந்திக்கிறது.

தென்னாப்பிரிக்கா அணியின்  கேப்டன் பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென், மற்றும் புவுலர்  காஜிசோ ரபடா  ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையில், ஒருசிலரை நம்பிதான் அணி ஆடி வருகிறது. ஏற்கனவே இதே மைதானத்தில்தான் தென்னாப் பிரிக்கா அணி இந்தியாவிடம்  6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், மைதானம் குறித்து வீரர்களுக்கும் தெரிந்திருக்கும். எனவே இன்றைய ஆட்டத்தை சிறப்பாக ஆடுவார்கள் என நம்பப்படுகிறது.

அதேவேளையில், பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பான வீரர்களை கொண்ட  வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று தென்னாப்பிரிகாவை சிதறடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அணியின்   ஆல்-ரவுண்டர்கள் ஆந்த்ரே ரஸ்செல், ஜாசன் ஹோல்டர், கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர் போன்றோர்  நல்ல பார்மில் உள்ளனர்.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் விவரம்

தென்ஆப்பிரிக்கா: அம்லா, குயின்டான் டி காக், பாப்டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், டுமினி, பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி அல்லது பீரன் ஹென்ரிக்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ்: இவின் லீவிஸ், கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், காட்ரெல், ஒஷானே தாமஸ்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.