மான்செஸ்டர்

உலகக் கோப்பை 2019 முதல் அரையிறுதி போட்டி மழையால் தடை பட்டதால் இன்று காலை போட்டி தொடர உள்ளது.

உலகக் கோப்பை 2019 போட்டிகளில் முதல் அரையிறுதி போட்டியில் மான்செஸ்டரில் நேற்று இந்தியா மற்றும் நியுஜிலாந்து அணிகள் மோதின. நியுஜிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. நியுஜிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் மற்றும் நிக்கோலஸ் ஆகியோர் தொடக்க வீரர்கலாக களம் இறங்கினர். புவனேஷ்குமார், பும்ரா பந்து வீச்சுகளில் இருவரும் திணறினர்.

இந்திய அணியின் வீரரான குல்தீப் யாதவ் நீக்கப்பட்டதால் அவருக்கு பதில் சாகல் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் பலரும் எதிர்பார்த்த முகமது ஷமி அணியில் இடம் பெறவில்லை. இந்த எதிர்ப்பை பல ரசிகர்கள் டிவிட்டரில் காட்டி உள்ளனர். ஆயினும் இந்திய வீரர்கள் இடையே எவ்வித பாதிப்பும் இன்றி பந்து வீசி நியுஜிலாந்தை திணற அடித்து வந்தனர்.

மூன்றாவதாக களம் இறங்கிய நிக்கோலஸ் உடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். முதல் 10 ஓவர்களில் பவர் பிளேயில் நியுஜிலாந்து அணி 27 ரன்களே எடுத்தது. அதன் பிறகு நிகோலஸ் ஆட்டம் இழந்ததால் ராஸ் டெய்லர் களமிறங்கினார். அவ்ர் வில்லியம்சன் உடன் இணைந்து நியுஜிலாந்தை ஓரளவு மீட்டார் என கூறலாம். நியுஜிலாந்து 28.3 ஓவரில் 100 ரன்னை தொட்டது. வில்லியம்சன் தொடர்ந்து நன்கு விளையாடியும் 67 ரன்களில் அவுட் ஆனார்

நியுஜிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கட் இழந்து 211 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நிற்காமல் தொடர்ந்து பெய்தது. இதனால் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா பேட் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஆயினும் மழை விடாததால் நேற்றைய ஆட்டம் நிறுத்தப் பட்டது. இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் நியுஜிலாந்து பேட்டிங்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.