பிஃபா 2018: அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் – பெல்ஜியம் பலப்பரீட்சை

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டிகள் இன்று தொடங்குகிறது. இன்றைய போட்டியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில் இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இதில் வெல்லும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி, மூன்றாவது இடத்துக்குகான போட்டிக்கு முன்னேறும்.
France-vs-Belgium-semi-final
இரு அணிகளும் இதுவரை 73 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. பெல்ஜியம் 30 போட்டிகளிலும், பிரான்ஸ் 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 19 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகள் இதற்கு முன்னர் இரு முறை மோதி உள்ளன. இதில் இரு ஆட்டங்களிலும் பிரான்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

பிரான்ஸ் அணி இம்முறை இளம் வீரர்களை அதிக அளவில் கொண்ட நிலையில் பயம் இல்லாத ஆட்டத்தை விளையாடி வருகிறது. பிரான்ஸ் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரை இறுதியில் கால்பதித்துள்ளது. 19 வயதான கிளியான் மாபே, மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் 22 வயதுடைய பெஞ்சமின் பவார்டு மற்றும் லூக்காஸ் ஹெர்னாண்டஸ் அணியின் வெற்றிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். இதில் பெஞ்சமின் பவார்டை வலது ஓரத்திலும், ஹர்னாண்டஸை இடது ஓரத்திலும் பயன்படுத்தும் முடிவை பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸ் எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் 20 சர்வதேச ஆட்டங்களில் மட்டுமே விளையாடி உள்ளனர்.

ரஷ்ய உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி 14 கோல்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்த அணிகள் பட்டியலில் பெல்ஜியம் முதலிடத்தை பெற்றது. நாக் அவுட் சுற்றில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பின் தங்கியிருந்த பெல்ஜியம் அணி மார்ட்டின்ஸ் துணிச்சலான மாற்றம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. எதிரணியின் பலவீனத்தை அறிந்து அதற்கு தகுந்தவாறு அணியின் பார்மட்டை அமைப்பதில் மார்ட்டின்ஸ் கைதேர்ந்தவராக இருப்பதே அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. முதல் முறையாக பெல்ஜியம் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று வரலாற்று சாதனை படைக்கும் முனைப்பில் மார்ட்டின்ஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
semi-final-fifa
பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகளின் கோல்கீப்பர்கள் அசுர பலமாக உள்ளனர். பிரான்ஸ் கோல்கீப்பரான ஹியூகோ லொரிஸ், உருகுவே அணிக்கு எதிரான கால் இறுதியில் அபாரமாக செயல்பட்டு எதிரணியின் கோல் அடிக்கும் இரு வாய்ப்புகளை தகர்த்தெறிந்தார். அதேபோல் பெல்ஜியம் அணியின் கோல்கீப்பரான கோர்ட்டுவா, பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிரணியின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். இதனால் இரு அணிகளும் கோல் அடிப்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரரான ஈடன் ஹஸார்டு, டிபன்ஸில் பலம் சேர்க்கக்கூடியவர். இதேபோல் ரோமுலு லுகாகு, டி புரூயன் ஆகியோரும் அணியின் தூண்களாக உள்ளனர். மின்னல் வேகத்தில் பந்தை கடத்திச் செல்லும் திறன் கொண்ட லுகாகு, இந்தத் தொடரில் 4 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்திலும் லுகாகு மிரட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜான் வெர்டொங்கன், பெலானி, தாமஸ் வெர்மியேலன், சாட்லி ஆகியோரும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

பிரான்ஸ் அணியின் முன்னணி வீரரான ஆலிவர் கிரவுடு இதுவரை கோல் அடிக்கவில்லை என்றாலும், அவர் பந்தை கையாளும் விதமானது கிளியான் மாபே, கிரீஸ்மான் ஆகியோரை சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கிறது. இதில் கீரிஸ்மான், அர்ஜென்டினா அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றில் இரு கோல்கள் அடித்து மிரளச் செய்திருந்தார். இவர்களுடன் சாமுவேல் உமிட்டி, பால் போக்போ ஆகியோர் பலம் சேர்ப்பவராக உள்ளனர். இந்த கூட்டணி மீண்டும் மிரட்டக் காத்திருக்கிறது.

ரஷ்ய உலக கோப்பை போட்டியில் இரு அணிகள் கடந்து வந்தவை:

பிரான்ஸ்: லீக் சுற்றில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவையும், பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்தது. இதைத்தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினாவை 4-3 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் உருகுவே அணியை 2-0 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து அரை இறுதியில் கால்பதித்துள்ளது.
france
பெல்ஜியம்: லீக் சுற்றில் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பனாமாவையும், 5-2 என்ற கோல் கணக்கில் துனீசியாவையும், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியையும் பந்தாயது. நாக் அவுட் சுற்றில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி மிரளச் செய்தது. கால் இறுதியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
belgium
தொடர்ந்து நாளை மறுநாள் மாஸ்கோவில் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் 28 ஆண்டுக்கு பின் உலகக்கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்துள்ள இங்கிலாந்து அணி குரோசியா அணியை எதிர்கொள்கிறது. இதில் வெல்லும் அணி பெல்ஜியம், பிரான்ஸ் போட்டியில் வெல்லும் அணியுடன் இறுதி போட்டியில் மோதும். தோல்வியடையும் அணி மூன்றாவது இடத்துக்குகான போட்டிக்கு முன்னேறும்.