ரியோ டி ஜெனீரோ:

பிரேசில் நாட்டி’ன் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில்  இந்தியாவின் மானு பாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

ஏற்கனவே,  தமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்றதைத் தொடர்ந்து,  இந்திய வீரர்  அபிஷேக் வர்மா உள்பட 4 தங்கள் பெற்றிருந்த நிலையில், தற்போது மானு பாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி 5வது தங்கத்தை  வென்றுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் உலகத் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  72 நாடுகளை சேர்ந்த 541 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டி கடந்த ஆகஸ்டு (2019) 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கடைசிநாள் போட்டியில், கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர்- சவுரப் சவுத்ரி ஜோடி பங்கேற்றது.

இந்த ஜோடி, சக நாட்டவர்களான யாஷ்அஸ்வினி சிங் – அபிஷேக் வர்மா இணையை 17-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.  தோல்வி அடைந்த யாஷ்அஸ்வினி- அபிஷேக் வர்மா ஜோடி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் புள்ளி பட்டியலில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் உள்பட  9 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

சீனா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.