சவுத்தாம்ப்டன்:

உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரக்கா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.


இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை லீக் போட்டிகள் மோதுகின்றன.

நேற்று சவுத்தாம்ப்டனில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பீல்டிங் தேர்வு செய்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் ஷம்சி, டுமினி நீக்கப்பட்டு மார்க்ரம், ஹென்ரிக்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

மேற்கு இந்திய தீவுகள் அணியில் ரசல், லீவுக்குப் பதில் டேரன் பிராவோ, கீமர் ரோச் ஆகியோர் இடம் பிடித்தனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆம்லா, குயிண்டன், டி காக் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆம்லா 6 ரன் எடுத்தபோது, காட்ரெல் பந்தில் அவுட் ஆனார்.
மறுபக்கம் காட்ரெல் பந்தில் குயின்டன் பவுண்டரி அடித்தார். 7-வது ஓவரை வீசிய காட்ரெல், மார்க்ரமை(5) அவுட்டாக்கினார்.

தென் ஆப்பிரிக்க அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 29 ரன்கள் எடுத்திருந்தி நிலையில், மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. குயின்டன் (17) மற்றும் கேப்டன் டுபிளசி(0) ஆகியோர் அவுட் ஆகாமல் இருந்தனர்.

தொடர்ந்து லேசான தூறல் இருந்தது. 5 மணி நேரமாக இதே நிலை நீடித்ததால், போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் ஆட்டம், டாஸ் கூட போடமுடியாமல் மழையால் ரத்தானது.

தென் ஆப்பிரிக்க அணி முதல் 4 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை.

அடுத்து ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 5 அணிகளையும் வென்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அரையிறுதியில் பங்கேற்க முடியும்.