உலகக் கோப்பை : அரசு முடிவை ஏற்க உள்ளதாக விராட் கோலி அறிவிப்பு

மும்பை

லகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து அரசு முடிவை ஏற்றுக் கொள்ள உள்ளதாக இந்திய அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் தொடர் பயங்கரவாத ஆதரவால் அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி போட்டிகளில் கலந்துக் கொள்வது கிடையாது. இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள உலகக் கோப்பை பந்தயத்தில் வரும் ஜூன் மாதம் 16 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடந்த காஷ்மீர் மாநில புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாக் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது பொறுப்பு ஏற்றுக் கொண்டது. பல உலக நாடுகள் இந்த தாக்குதலை ஒட்டி பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா பல நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி மோதக்கூடாது என பலரும் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் பாகிஸ்தானுடன் அவசியம் விளையாட வேண்டும் என வற்புறுத்தப் பட்டால் இந்திய அணி இந்த போட்டியில் இருந்து விலக வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி செய்தியாளரகளை சந்தித்தார். அப்போது அவர், “புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எங்கள் அஞ்சலியையும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தாக்குதலால் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடக் கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்திய அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்கு இந்திய அணி கட்டுப்பட்டு நடக்கும். இந்திய அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை ஏற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி