காஷ்மீர் தாக்குதல் : ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்

டில்லி

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நேற்று மாலை சுமார் 3.15 மணிக்கு பாகிஸ்தான் தீவிரவாத ஜெய்ஷ் ஈ முகமது அமைப்பின் தற்கொலைப் படை வீரர் 350 கிலோ வெடி மருந்துடன் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்றுக் கொண்டிருந்த வாகனங்களின் மேல் மோதியதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 45 பேர் மரணம் அடைந்தனர்,   இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் புதின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு தனது இரங்கல் கடிதத்தை அனுப்பி உள்ளார்.   அந்த கடிதத்தில், “இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ம்ரணம் அடைந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.  நாங்கள் இந்த கொடூர குற்றத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதை திட்டமிட்டவர்களும் நடத்தியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.  தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான எந்த ஒரு உதவியையும் இந்தியாவுக்கு அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.   ரஷ்ய மக்களும் இந்திய மக்களின் சோகத்தில் பங்கு பெறுவதோடு காயமடைந்தோர் விரைவில் குணம் பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளன்ர்.”  என புதின் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இந்தியாவுக்கு அளித்த செய்தியில், “பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.   எனவே பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.  தீவிரவாதத்தை எதிர்க்க இந்தியாவுக்கு அனைத்து உதவியையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது” ஏன தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டைநாடான இந்தோநேசியா, “இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.  இந்தோநேசிய அரசும் மக்களும் மரணம் அடைந்த மாவீரர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.  தீவிரவாதத்துக்கு எதிரான உலக நாடுகளின் நடவடிக்கைகளுக்கு இந்தோநேசியா என்றும் துணை நிற்கும் ” என செய்தி அனுப்பி உள்ளது.

இது போல ஐக்கிய அரபு அமீரகம், பெஹரைன் போன்ற அரபு நாடுகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.