வாஷிங்டன்:

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் வெளியாகும் ‘‘தி அமெரிக்கன் இன்டரஸ்ட்’’ பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த முதல் 8 நாடுகளின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்த வகையில் 2017ம் ஆண்டுக்கான பட்டியலை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கு 6ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் ஜப்பானைப் போலவே இந்தியாவும் அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், உண்மையில் பிற நாடுகளைப் பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு உலக அரங்கில் இந்தியாவுக்கு தனித்துவம் வாய்ந்த செல்வாக்கு உள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கையில் உலகிலேயே 2வது இடத்தில் உள்ளது. பல இன, மொழி, கலாசாரங்களைக் கொண்டுள்ள இந்தியா அதிவேகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டு வருகிறது. உலக அரசியலில் இந்தியா குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கிறது. இந்தியாவுடன் ராணுவ மற்றும் பொருளாதார நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

பிரதமர் மோடியின் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்தியா முன்னோக்கி நகர்கிறது. பாகிஸ்தான் மூலம் ஏற்பட்ட அச்சுறுத்தல், பணமதிப்பிழப்பு போன்வற்றால் ஏற்பட்ட பிரச்னைகளையும் மீறி இந்தியா வீரநடைபோடுகிறது.

பல ஆண்டுகளாக அணிசேரா நாடாகத் திகழ்ந்து வந்தாலும் அமெரிக்கா, ஜப்பான் நாடுகளுடனான உறவில் மோடி அரசு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த ஜப்பான், பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இந்திய அரசு பல ஒப்பந்தங்களை மேற்கொண்டது என்று அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவும், 2வது இடத்தை சீனா மற்றும் ஜப்பான் நாடுகளும், ரஷ்யா 4-வது இடத்தையும், ஜெர்மனி 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. 7, 8-வது இடங்களில் முறையே ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் பிடித்துள்ளது.